மட்டக்களப்பு மாவட்டத்துக்கே வாழ்வாதாரம் -உன்னிச்சைக் குளம் :



இலங்கையின் மீன்பாடும் தேன் நடாகத் திகழ்வது மட்டு நகராகும். மட்டக்களப்பு மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ளது. இது நாட்டின் முழுப்பரப்பில் இரண்டாயிரத்து அறுநூற்று முப்பது சதுரகிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்டது.



பூகற்பவியலாளரின் கூற்றின் பிரகாரம் இம்மாவட்டம் மூன்று தசம் ஐந்து சதவீதத்தைக் குறிக்கின்றதாம். இந்த மாவட்டத்தின் பிரதான நகரமன மட்டுநகர் மட்டக்களப்பு மாநகர சபையின் உள்ளூராட்சி நிர்வாகத்தின் கீழ் செயற்பட்டு வருகின்றது. தலைநகர் கொழும்பிலிருந்து மட்டக்களப்பு மாநகரம் சுமார் முந்நூறு கிலோமீற்றர் தொலைவில் உள்ளது.



இம்மாவட்டத்தின் நீர்பாசனம் மற்றும் குடிநீர் வசதிகள் பற்றி ஆராய்வது இங்கு உசிதமாகும். மட்டக்களப்பு மாவட்ட மக்களின் பிரதான தொழில்களாக விவசாயம், மீன்பிடி, கால்நடை வளர்ப்பு என்பன விளங்குகின்றன. நெல் உற்பத்தியைப் பொறுத்தவரை இம்மாவட்டம் முன்னணி வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
உறுகாமம், உன்னிச்சை, வாகனேரி, கட்டுமுறிப்பு போன்ற நீர்த்தேக்கங்களிலிருந்து சிறுபோக மற்றும் பெரும்போக விளைச்சலுக்கு அவசியமாகத் தேவைப்படுகின்ற நீரைப் பெற்றுக் கொள்ள முடிகின்றது. வானம் பார்த்த பூமி இதில் உள்ளடக்கப்படவில்லை.
வாகனேரிக்குளம் நெல்வயல்களுக்கு பாசன வசதி மேற்கொள்வதோடு நின்று விடாது அருகிலுள்ள வாழைச்சேனை காகித ஆலையின் கடதாசி உற்பத்திக்கு வேண்டிய நீரை கடந்த ஐந்து தசாப்த காலங்களுக்குமேலாக இன்று வரை விநியோகித்து வருகின்றமை ஒரு விசேட அம்சமாகும்.



இனி நகர்ப்புறங்களில் குடிநீர் விநியோகம் எவ்வாறு செயற்படுத்தப்பட்டு வருகின்றது. என்பதைப் பார்ப்போம். தற்சமயம் சாதாரண குழாய்நீர் விநியோகம் நடைபெறுகின்றது.
மட்டக்களப்பு மாநகர சபை மற்றும் காத்தான்குடி நகரம் என்பவற்றிற்கு பழைய நடைமுறையின் பிரகாரம் குழாய் நீர் விநியோகம் நடைபெற்று வருகின்றது. இது சுமார் ஐம்பது ஆயிரம் மக்களின் நீர்த்தேவையை ஓரளவிற்கு பூர்த்திசெய்கின்றமை கண்கூடு, நிலத்தடிநீரை கிணறுகளிலிருந்து நீர்த்தாங்கிக்கு ஏற்றிய பின் சிறு குழாய் மூலம் நீர் விநியோகம் தொடருகின்றது.



அதேவேளை மட்டக்களப்பு நகருக்கான நீர்த்தேவையை பூர்த்தி செய்யும் நோக்குடன் இரண்டாயிரத்து இரண்டாம் ஆண்டு ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் பாரிய குழாய் நீர் திட்டமொன்று நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.
இத்திட்டம் தேசிய நீர்வழங்கல் வடிகால் அமைப்பு சபையினரின் அனுசரணையுடன் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.



நீர்விநியோகத்திற்கு தேவையான தண்ணீரைப் பெற்றுக் கொள்வதற்கு மட்டு நகரிலிருந்து இருபது கிலோமீற்றர் தென்மேற்கு திசையில் அமைந்துள்ள உன்னிச்சை நீர்பாசன குளம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. நீர்த்தாங்கிகள், குளத்திலிருந்து நீரைத்தருவிக்க உபயோகப்படுத்தப்படுகின்ற பல்வேறுபட்ட விட்டங்களைக் கொண்ட நீர் விநியோகிக்கும் குழாய்களை நிலத்தில் பதித்தல் போன்ற பணிகள் ஏறக்குறைய முடிவடையும் நிலைக்குவந்துள்ளன.



இச்செயற்திட்டங்கள் அனைத்தும் மக்கள் சீன குடியரசின் நிறுவனமொன்றினால் ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. எதிர்வரும் டிசம்பர் மாதமளவில் ஒப்பந்தம் முடிவடையக் கூடிய சாத்தியக் கூறுகள் தென்படுகின்றன. அதன் பின்னர் மாவட்ட மக்கள் இருபத்து நான்கு மணி நேரமும் நீரைப் பெற்றுக் கொள்ளும் வசதி கிட்டலாம். இக்குழாய் நீர் விநியோகம் எண்பது கோடி ரூபா செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.



இதன் மூலம் மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்கள் மற்றும் காத்தான்குடி, ஆரயம்பதி, செங்கலடி, ஏறாவூர் பிரதேச செயலகங்களில் வாழும் மக்கள் பெரும் நன்மை அடைவார்கள். உன்னிச்சை நீர்ப்பாசன குளத்திலிருந்து சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படாத நீரை மாசில்லாமல் ஆக்கவல்ல நிலையமொன்று மட்டு நகருக்கு அருகிலுள்ள மண்முனை மேற்குப் பிரிவில் அமைந்துள்ளது. அதேவேளை நாற்பது ஆயிரம் கன மீற்றர் நீரை சுத்தகரிக்கும் திறனைக் கொண்ட நிலையமொன்று வவுணதீவில் அமைக்கப்படுவதாகவும் அறிய முடிகின்றது.



இறுதியாக உன்னிச்சை நீர்த்தேக்கத்தின் விபரங்களைச் சிறிது நோக்குவோம். உன்னிச்சை நீர்ப்பாசன குளம் மட்டக்களப்பு மாவட்டத்தினுள் அமைந்துள்ள போதிலும் அம்பாறை, பதுளை, மொனராகலை மாவட்டங்களின் நீரேந்து பகுதிகளிலிருந்து நீரைப் பெற்றுக் கொள்கின்றமை வெள்ளிடை மலை. பருவகால ஆறாகிய மகிழவட்டுவானாறும், ஆறுகிளை ஆறுகளும் பெருமளவு நீரை உன்னிச்சை குளத்திற்கு கொண்டுவருகின்றன.



நீர்த்தேக்கத்தின் பின்புறமாக மக்கள் நடமாட்டமற்ற காடுகள் அமைந்துள்ளதினால் இக்குளத்தை வந்தடையும் நீர்மாசற்றதாய் காணப்படுகின்றது. இந்நீர்த் தேக்கத்திலிருந்து பாசனத்திற்குப் பயன்படுத்தப்படுகின்ற இருபோகத்திற்கும் உபயோகிக்க கூடியதாகவுமுள்ளது. இதனால் மட்டக்களப்பு மாவட்டம் நெல்விளைச்சலில் முன்னணி வகிக்கின்றது என்றும் கூறலாம்.



மட்டக்களப்பு மாவட்டத்தில் பரிணமித்துள்ள நீர்தேக்கங்களில் உன்னிச்சையே பெரிதாகும். இக்குளத்திலிருந்து நெல்வயல்களுக்கு நீரைத்தங்குதடையின்றி விநியோகிப்பதற்கு வலது கரைக் கால்வாய், இடதுகரைக் கால்வாய்கள் என்று இரு கால்வாய்கள் அமையப்பெற்றுள்ளன. அவை முறையே இருபத்து இரண்டு தசம் ஐந்து மற்றும் இருபத்தொன்பது கிலோ மீற்றர் நீளத்தைக் கொண்டனவாகும். வலதுகரைக் கால்வாய் நாவற்காடு, ஈச்சந்தீவு குறிஞ்சாமுனை வாயிலாகச் சென்று கரவெட்டி ஆற்றில் சங்கமமாகின்றது.



கால்வாய்களின் ஆழம் எட்டு தசம் ஆறு, எழுதசம் ஆறு மீற்றர்களாகும். இடது கரைக் கால்வாய், இது ஆயித்தமலைக்கிராமத்தின் கரடியனாற்றில் விழுகின்றது. நீர்பாசனம் நிறைவடைந்த பின்னர் எஞ்சிய நீராக நாற்பத்தெட்டு சதவீதம் மட்டக்களப்பு வாவியல் கலக்கின்றது உன்னிச்சை குளத்தின் நீரேந்து பிரதேசம் இருநூற்று எழுபத்து நான்கு தசம் ஐந்து சதுர மீற்றராகும்.



இதன் கொள்ளளவு ஆரம்பத்தில் ஐம்பது எம்.சி.எம். (ணிவிணி) ஆகவும் தற்போது அணை குறிப்பிடத்தக்க அளவு உயர்த்தியதினால் எழுபது எம்.சி.எம். ஆகியுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி ஒதுக்கிய நிதியில் சுமார் ஐந்து கோடி உன்னிச்சை குள நிர்மாணப் பணிக்கு செலவாகியதாகவும் தெரிய வருகின்றது.



நீர்வளமும் நிலவளமும் ஒன்றிணைந்துள்ள மட்டக்களப்பு மாவட்டத்தில் உன்னிச்சை குளம் மூலம் விவசாயம், கால்நடை என்பன வளர்ச்சி பெறுகின்றன.
இதனால் பொருளாதாரமும் மேம்பாடு அடைய நிறைய வாய்ப்புக்கள் ஏற்படுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.(நன்றி: அழகான மட்டக்களப்பு)