அமெரிக்க நாட்டில் மர்ம நபர் ஒருவர் ‘ஒபாமா’ என உரக்க கத்திக்கொண்டு ஓடி வந்தபோது அவரை பொலிசார் சுற்றி வளைத்து சரமாரியாக சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பல வருடங்களாக சர்ச்சையில் இருந்து வந்த துப்பாக்கி கலாச்சாரம் தொடர்பாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா கடந்த செவ்வாய்க்கிழமை அன்று புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார்.
இதன் மூலம், பொதுமக்கள் துப்பாக்கிகளை சொந்தமாக வாங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் விதிக்கப்பட்டது.
ஒபாமாவின் இந்த அதிரடி அறிவிப்பிற்கு பல எதிர்ப்புகளும் கிளம்பின.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை 5.47 மணியளவில் கலிபோர்னியாவில் உள்ள ரெட்டிங் நகரில் இருந்து பொலிசாருக்கு அவசர அழைப்பு வந்துள்ளது.
குறிப்பிட்டு வீட்டில் இருந்து 8 முறை துப்பாக்கி சத்தம் கேட்டதாக புகார் வந்துள்ளது.
புகாரை பெற்றதும் சுமார் 9 பொலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
அங்கு ஒரு அடுக்குமாடி குடியிருப்பிற்கு வெளியே மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியை ஏந்தியவாறு நின்றுள்ளதை பொலிசார் பார்த்துள்ளனர்.
உடனே அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி வளைத்த பொலிசார், ‘நபரின் கைகளில் இருந்த துப்பாக்கியை கீழே போடுமாறு உத்தரவிட்டுள்ளனர்.
ஆனால், பொலிசாரின் உத்தரவை மதிக்காமல் அவர்களை குறிவைத்து ‘ஒபாமா’ என உரக்க கத்திக்கொண்டு அந்த நபர் ஓடி வந்துள்ளார்.
ஆபத்தை உணர்ந்த பொலிசார் அனைவரும் அந்த நபரை சுமார் 30 முறை சரமாரியாக சுட்டுக்கொன்று வீழ்த்தியுள்ளனர்.
எனினும், பொலிசாரை நோக்கி அந்த நபர் துப்பாக்கியால் சுட்டாரா என்ற தகவல் எதுவும் வெளியாகவில்லை.
பொதுமக்கள் துப்பாக்கிகளை வாங்குவதற்கு எதிராக விதிமுறைகளை கட்டுப்படுத்தியதற்காக ’ஒபாமா’ என அந்த நபர் கத்தியிருக்கலாம் என பொலிசார் சந்தேகித்துள்ளனர்.
அதேசமயம், பொலிசாரை நோக்கி அச்சுறுத்தும் வகையில் ஓடி வந்ததால், தற்காப்பிற்காக அந்த நபரை சுட்டு வீழ்த்தியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.