தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப வழங்கி, சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தர,
இலங்கை அரசை, இந்தியா வற்புறுத்த வேண்டும் என, தமிழக ஆளுநர் ரோசய்யா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் பதினான்காவது சட்டமன்றப் பேரவையின் 2016ம் ஆண்டிற்கான முதல் கூட்டத் தொடரை ஆளுநர் ரோசய்யா தொடங்கி வைத்து, உரையாற்றிய போதே இவ்வாறு கூறியதாக இந்திய ஊடகமான தி ஹிந்து செய்தி வௌியிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தமிழக ஆளுநர் தமிழக சட்ட சபையில் பேசியதாவது,
"அன்றைய இலங்கை அரசு புரிந்த போர்க் குற்றங்கள், ஜெனிவா ஒப்பந்த விதிமீறல்கள் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையத்தில் தீர்மானத்தை நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகள் எடுக்குமாறு மத்திய அரசை வலியுறுத்தி, இந்த மாமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசு எடுத்த தொடர் முயற்சி நினைவு கூறத்தக்கது.
இலங்கைத் தமிழர்கள் மீது இத்தகைய கடுங் குற்றங்களைப் புரிந்தவர்கள் உரிய நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டு நீதியை நிலைநாட்டிட வேண்டுமென்று
இன்றைய இலங்கை அரசை மத்திய அரசு தொடர்ந்து வற்புறுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்த மாமன்றத்தில் இதுகுறித்து நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்களை மத்திய அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு, தமிழர்களுக்கு அவர்களின் நிலங்களைத் திரும்ப அளித்து அவர்கள் சம வாழ்வுரிமையுடன் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ ஒரு வாய்ப்பையும் ஏற்படுத்தித் தர வேண்டுமென இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும்.
பாக் நீரிணைப்புப் பகுதியின் பாரம்பரிய மீன்பிடிப் பகுதிகளில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களைத் தொடர்ந்து கைது செய்து, அவர்களின் படகுகளை சிறைப்பிடிக்கும் இலங்கைக் கடற்படையினரின் செயல்கள் கடும் கண்டனத்திற்குரியவையாகும். இந்த மீனவர்கள் விடுதலையான பின்னரும் சிறைப்பிடிக்கப்பட்ட படகுகளை விட மறுக்கும் இலங்கையின் போக்கு, பாதிக்கப்பட்ட தமிழக மீனவர்களுக்கு முடிவில்லாத் துயரத்தை ஏற்படுத்தி வருகிறது.
எனவே, கச்சத்தீவை மீட்டு, நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை மீண்டும் நிலைநாட்டி இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைக் காணவேண்டியது
நமது கடமையாகும். இப்பிரச்சினையின் முக்கியத்துவத்தினைக் கருத்தில் கொண்டு வெகு விரைவில் ஒரு இணக்கமான நிரந்தரத் தீர்வை எட்டிட மத்திய அரசும், இலங்கை அரசும் இணைந்து முயற்சி செய்யும் என நம்புகிறேன்."