பிரான்ஸ் நாட்டில் ஆங்கில மொழியை சரியாக பேச தெரியாத காரணத்தினால் அந்நாட்டு நிறுவனங்களில் பணிபுரியும் வாய்ப்பினை குடிமக்கள் இழந்துவருவதாக புள்ளிவிபரங்கள் வெளியாகியுள்ளது.
ஒரு நிறுவனத்தில் வேலைவாய்பிற்காக விண்ணப்பம் செய்யும்போது கேட்கப்படும் முக்கிய கேள்விகள் ஒன்று ‘ஆங்கில மொழியை சரளமாக பேசவும், எழுதவும் தெரியுமா?’
என்பது தான்.
வளர்ந்த நாடுகளில் ஒன்றான பிரான்ஸ் நாட்டு குடிமக்களும் இந்த கேள்வியால் பல வேலைவாய்ப்புகளை இழந்து வருவதாக அண்மையில் எடுத்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஒரு நிறுவனத்திற்கு பணிக்காக விண்ணப்பம் செய்பவர்களில் 10 சதவிகிதத்தினர் ‘எனக்கு ஆங்கிலம் சரளமாக பேச தெரியும்’ என தவறாகவே குறிப்பிடுகின்றனர்.
ABA English என்ற கல்வி நிறுவனம் எடுத்த ஆய்வில், பிரான்ஸ் நாட்டில் உள்ள ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 4 சதவிகித மக்கள் மட்டுமே சரளமாக ஆங்கிலம் பேசுவதாக தெரியவந்துள்ளது.
எஞ்சிய மக்கள் சுமாரான ஆங்கிலம், அல்லது ஆங்கில மொழியே தெரியாமலேயே உள்ளனர்.
பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 1,200 நபர்களிடம் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில், 23 சதவிகிதத்தினர் ’ஆங்கில மொழி தெரியாத காரணத்தினாலேயே வேலை கிடைக்கவில்லை’ என நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், நிறுவனத்தில் பணிபுரிய ஆங்கில மொழி அவசிய தேவை என்பதால், அந்த பணியை பெறுவதற்காக 48 சதவிகித மக்கள் ஆங்கில மொழியை கற்கின்றனர்.
இதே வரிசையில், பல்வேறு நகரங்கள் அல்லது நாடுகளுக்கு பயணம் செய்வதால், அப்பகுதி மக்களுடன் எளிதில் உரையாடுவதற்காக 23 சதவிகிதத்தினர் ஆங்கிலம் கற்று வருகின்றனர்.
எஞ்சிய 20 சதவிகிதத்தினர் பாடத்திட்டத்தில் ஆங்கில மொழியும் இருப்பதனால், மதிப்பெண் பெறுவதற்காக ஆங்கிலம் கற்கின்றனர்.
ஆங்கில மொழியை புறக்கணிக்க என்ன காரணம்?
பிரான்ஸ் நாட்டு மக்கள் ஆங்கில மொழியில் தேர்ந்தவர்களாக இல்லாததற்கு 3 முக்கிய காரணங்கள் கூறப்படுகிறது.
முதலாவதாக, பிற நாடுகளின் மக்கள் நினைப்பது போல், தாய்மொழி என்பது கலாச்சரத்தோட இணைந்தது.
எனவே தங்களுக்கு தாய்மொழியான பிரெஞ்ச் மொழி தெரிந்தாலே போதும் என்ற எண்ணத்தில் ஆங்கிலம் கற்றுக்கொள்வதை தவிர்க்கின்றனர்.
இரண்டாவதாக, அடிப்படை பாடத்திட்டங்களில் ஆங்கில மொழியை மாணவர்களுக்கு ஆர்வமுடன் கற்று தருவதில்லை என்பதாலும், அந்த மொழியின் அவசியம் தெரியாமல் போய்விடுகிறது.
இறுதியாக, இந்த ஆய்வில் சுமார் 64 சதவிகித மக்களுக்கு பல்வேறு பணிகளுக்கு இடையில் ஆங்கில மொழியை கற்றுக்கொள்ள கால அவகாசம் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளனர்.
ஆங்கிலம் தெரியாமல் வேலைவாய்ப்பினை இழப்பது பிரான்ஸ் நாட்டில் மட்டுமின்றி பல்வேறு நாடுகளிலும் நிலவி வருகிறது.
குறிப்பாக, வேறு நாடுகளுக்கு புகலிடம் கோரி செல்லும் புலம்பெயர்ந்தவர்கள் ஆங்கில மொழியை கற்றுக்கொள்வதன் மூலம் அவர்களுக்கு எளிதில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்பது வல்லுனர்களின் கருத்தாக உள்ளது.