போரின் இறுதிக்கட்டத்தில் படையினரிடம் சரணடைந்து காணாமற்போனோர் தொடர்பான விவகாரத்தில், புதியதொரு திருப்பமாக, இராணுவத்தின் 58ஆவது டிவிசனிடம், சரணடைந்தவர்கள் தொடர்பான பட்டியல் ஆவணம் ஒன்று இருப்பதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.
கடந்த புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில், இடம்பெற்ற விசாரணையின் போது, 58ஆவது டிவிசனின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் கே.சி.குணவர்தன, குறுக்கு விசாரணையின் போது இந்தப் பட்டியல் தமது டிவிசன் தலைமையகத்தில் இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் திருகோணமலை அரசியல் பொறுப்பாளராக இருந்த எழிலன் எனப்படும், சின்னத்துரை சசிதரன், கந்தம்மான் எனப்படும் பொன்னம்பலம் கந்தசாமி,
உருத்திரமூர்த்தி கிருஷ்ணகுமார் மற்றும் மஜித் எனப்படும் நடேசு முரளிதரன் அவரது மனைவி கிருஷ்ணகுமாரி, 4 வயது மகன் சாருஜன், 2 வயது மகள் அபிதா ஆகியோர் தொடர்பான, ஆட்கொணர்வு மனுக்கள் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகளிலேயே இந்தப் பட்டியல் விவகாரம் வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.
வவுனியா மேல் நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வந்த இந்த ஆட்கொணர்வு மனுக்கள் மீதான விசாரணையை இராணுவத்தரப்பு முன்னர் இழுத்தடித்து வந்தது.
பின்னர், இந்தச் சம்பவம் இடம்பெற்ற முல்லைத்தீவு நீதிமன்றத்துக்கு இதுபற்றி விசாரித்து அறிக்கை தரும்படி மேல்நீதிமன்றினால் பணிக்கப்பட்டது.
அதற்கமைய முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் விசாரணைகளில், 58ஆவது டிவிசன் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் கே.சி.குணவர்தன நேரில் முன்னிலையாகி, போரின் இறுதியில் தமது படைப்பிரிவிடம் சரணடைந்தவர்கள் தொடர்பான பட்டியல் ஆவணம் தம்மிடம் இருப்பதாகவும், ஆட்கொணர்வு மனுக்களில் கூறப்பட்டுள்ள ஏழுபேரும் அந்தப் பட்டியலில் இல்லை என்றும் அவர் கூறியிருக்கிறார்.
இதன் பின்னரே, அந்த ஆவணத்தை நீதிமன்றத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மனுதாரரின் சட்டத்தரணி கோரிக்கை விடுத்திருக்கிறார்.
ஆனால், அதற்கு அரசதரப்பு சட்டத்தரணி எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், நீதிபதி அதனை நிராகரித்து, எதிர்வரும் ஏப்ரல் 19ஆம் திகதி நடத்தப்படும் விசாரணையில் அந்தப் பட்டியலை சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.
இதுவரைக்கும், போரின் இறுதியில் சரணடைந்தவர்கள் பற்றிய ஒரு பட்டியல் இருப்பது பற்றி எந்தவொரு சந்தர்ப்பத்திலும் இராணுவத்தரப்பினால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கவில்லை.
போரின் இறுதியில் சுமார் 12 ஆயிரம் புலிகள் சரணடைந்தனர்.
அவர்களில், கடுமையான குற்றங்களைச் செய்த சுமார் 300 பேர் தவிர, ஏனையவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றே இராணுவத் தரப்பும், அரசாங்கத் தரப்பும் கூறிவந்தன.
இப்போது தான், தம்மிடம் சரணடைந்தவர்களின் பட்டியல் ஆவணம் உள்ளது என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறது, 58ஆவது டிவிசன்.
இறுதிக்கட்டப் போரில் மிகவும் முக்கிய பங்காற்றிய இந்த டிவிசன் இப்போது, பூசாவைத் தலைமையிடமாகக் கொண்டு செயற்படுகிறது.
மன்னாரில் உயிலங்குளத்தில் இருந்து, முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் வரை இந்தப் படைப்பிரிவு, விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப்போரில் கணிசமான பங்கை வகித்திருந்தது.
ஆரம்பத்தில் அதிரடிப்படை 2 என்ற பெயரில், அரை டிவிசனாக இயங்கிய இந்தப் படைப்பிரிவு, போரின் இறுதிக்கட்டத்தில், முழுமையான டிவிசனாக அங்கீகரிக்கப்பட்டது
.
மன்னார் தொடக்கம், முல்லைத்தீவு வரை போரை நடத்திச் சென்ற இந்த டிவிசனின் கட்டளை அதிகாரியாக இருந்தவர் தான், மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா.
விடுதலைப் புலிகளின் அரசியல்துறையைச் சேர்ந்த நடேசன், புலித்தேவன் போன்றவர்கள் வெள்ளைக்கொடியுடன் இவரது படைப்பிரிவிடமே சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.
இவர்கள் சரணடையவில்லை என்றும் போரில் கொல்லப்பட்டதாகவும் இராணுவத் தரப்பு கூறுகிறது.
எவ்வாறாயினும், இந்த விவகாரத்தில், கஜபா படைப்பிரிவு அதிகாரியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன.
முன்னைய அரசாங்கம், இவருக்கு அதிக கௌரவத்தை வழங்கியதுடன், ஐ.நா.வுக்கான பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் நியமித்திருந்தது.
அந்தப் பதவிக்காலம் முடிந்த பின்னர், அவரை தென்னாபிரிக்காவுக்கான தூதுவராக நியமிக்க முன்னைய அரசாங்கத்தினால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அதற்கு அந்த நாட்டு அரசாங்கம் இணங்கவில்லை.

