பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிகடை சிறைச்சாலையில் உள்ள 14 பேர் மற்றும் அனுராதபுரம் சிறைச்சாலையிலுள்ள இருவரே இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேவேளை, கேகாலை நீதவான் நீதிமன்றத்தில் இருந்து நான்கு கைதிகள் தப்பிச் சென்றமை தொடர்பில் விஷேட விசாரணைகளை சிறைச்சாலைகள் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.
அபேபுஸ்ஸ சிறைச்சாலை உதவி அத்தியட்சகரின் தலைமையில் இந்த விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் துஷார உபுல்தெனியா குறிப்பிட்டுள்ளார்.
வழக்கு விசாரணைகளுக்காக அழைத்துவரப்பட்ட ஐந்து கைதிகள் நேற்று சிறைச்சாலை உத்தியோகத்தரைத் தாக்கி விட்டு தப்பிச் செல்ல முற்பட்டனர்.
அதில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் ஏனைய நால்வரையும் தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மேலும், இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
