மரங்கள் பெருமளவில் வெட்டப்பட்டது கிளந்தானில் வெள்ளப் பெருக்கு ஏற்பட காரணமாக இருந்திருக்கலாம் என்பதை ஒப்புக்கொண்ட பாஸ் உதவித் தலைவர் சலாஹுடின் ஆயுப் ஆனால், அதுவே தலையாய காரணமாக இருக்க முடியாது என்பதையும் வலியுறுத்தினார்.
ஏனென்றால் மற்ற மாநிலங்களிலும் கடுமையான வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது என்றாரவர்.
“ஜோகூரில் பெரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதற்கு என்ன காரணம்? கெமமானில்? பெக்கானில்?”.
செய்தியாளர் கூட்டமொன்றில் கிளந்தானில் பரவலாக மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டது அம்மாநிலத்தில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியிருக்கலாமோ என்று வினவப்பட்டதற்கு அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.
முன்னெப்போதும் இல்லாத வகையில் இவ்வாண்டு மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டதற்கான காரணத்தை விரிவாக ஆராய வேண்டும் என சலாஹிடின் கூறினார்.
