சென்னையை அடுத்த தாம்பரம், சேலையூரை சேர்ந்த கல்லூரி மாணவி தியா(19). இவர் நேற்று முன்தினம் நீலாங்கரை பொலிசில் ஒரு புகார் கொடுத்தார்.
அதில் நானும், எனது காதலனும் நீலாங்கரை கடற்கரைக்கு சென்றோம். சிறிது நேரம் பேசிவிட்டு பின்னர் வீடு திரும்பினோம்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஆசாமி ஒருவன் தான் பொலிஸ் என்று கூறி எங்களை விசாரித்தார். ஒரு கட்டத்தில் எங்களை மிரட்ட ஆரம்பித்தார். மேலும் விசாரணை நடத்த வேண்டும் என்று கூறி என்னை மட்டும் அவரது மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றார்.
பின்னர் ஒரு அறையில் என்னை அடைத்து பலவந்தமாக கற்பழித்து விட்டார், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து அந்த நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் பொலிசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
மேலும், தியாவுக்கு சென்னை அரசு பொது மருத்துவமனை மற்றும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில், கல்லூரி மாணவிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில், அவர் பலவந்தமாக கற்பழிப்புக்கு ஆளானார் என்பதற்கான தடயங்கள் சிக்கவில்லை.
மேலும், அவர் பலாத்காரத்துக்கு உள்ளாக்கப்பட்டார் என்பதை நிரூபிக்கும் எந்த காயங்களும் அவரது உடலில் இல்லை. கல்லூரி மாணவி கூறியதை நாங்கள் ஏற்க மறுக்கவில்லை. இருப்பினும் முழு மருத்துவ அறிக்கை ஓரிரு நாட்களில் கிடைத்துவிடும் என்று கூறியுள்ளனர்.
இதுகுறித்து பொலிஸ் தரப்பில் கூறப்படுவதாவது, மருத்துவ அறிக்கை வந்த பின்னரே இந்த வழக்கில் உண்மையான தகவல்கள் தெரியவரும்.
பொலிஸ்காரர் போல மிரட்டிய அந்த நபரை நெருங்கி வருகிறோம். விரைவில் அந்த ஆசாமியை கண்டுபிடித்து விடுவோம். அதன்பிறகே இந்த சம்பவத்தில் உண்மையிலேயே நடந்தது என்ன? என்பது தெரியவரும் என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் எனவும் கூறியுள்ளனர்.
 |