என் புருஷன் எனக்கு மட்டும் தான்: 3 மனைவிகளின் குடுமிபிடி சண்டையால் உயிர் விட்ட கணவன்

மதுரை மாவட்டத்தில் கணவருக்காக 3 மனைவிகள் சண்டையிட்டு கொண்டதால் கணவர் தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை அவனியாபுரம் அருகே வைக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர், அங்குள்ள மசாலா கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

இவரது மனைவி சத்தியா, இருவருக்கும் திருமணம் நடந்து 3 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 2 குழந்தைகள் உள்ளனர்.

மணிகண்டன், வீடு– வீடாக சென்று மசாலா பாக்கெட்டுகளை வினியோகித்து வந்தார். அப்போது அவனியாபுரம் பகுதியில் பொன்முத்து, ரகமத் ஆகிய 2 பெண்களுடன் தொடர்பு ஏற்பட்டது.

ஒருவருக்கொருவர் தெரியாமல் அவர்களுடன், மணிகண்டன் குடித்தனம் நடத்தி வந்தார். இந்த விடயம் முதல் மனைவி சத்தியாவுக்கு தெரியவரவே, கணவரை கண்டித்தார்.

மேலும் சத்தியா, 2 பெண்களின் வீட்டுக்கு சென்று ‘‘என் கணவருடன் எப்படி தொடர்பு வைத்துக் கொள்ளலாம்?’’ என்று கூறி தகராறில் ஈடுபட்டார். கடந்த 24ம் திகதி அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது.

மணிகண்டனை நான் தான் முதலில் திருமணம் செய்துள்ளேன் என்று கூறி 3 பேரும் குடுமிபிடி சண்டையில் இறங்கினர். இதனை பார்த்த மணிகண்டன் மனவேதனையடைந்து வீட்டுக்கு சென்றுள்ளார்.

அங்கு உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், இன்று காலை பரிதாபமாக உயிர் இழந்தார்.

சிலைமான் பொலிசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்