நடிகை பூனைக் கண் புவனேஸ்வரி விபசார வழக்கில் கைது செய்யப்பட்டார். ஊடகங்களுக்குக் கணிசமான செய்தி கிடைத்தது. பல ஆண்டுகளுக்கு முன்னாலும் அவர் இதே போல் கைது செய்யப்பட்டார்.
ஊழல் வழக்கில் மாட்டிக்கொண்டு நீதிமன்ற வாசலில் கை ஆட்டிச் செல்லும் அரசியல்வாதிகள் போல் அவரும் பெருமையாகக் கை ஆட்டிச் சென்றார். பிறகு விடுதலை ஆனார். இப்போது கைது செய்யப்பட்டபோது, ஒன்பதாவது படிக்கும் தன் மகனுக்காகத்தான் தான் உழைத்து வருவதாகப் பேட்டி கொடுத்தார்.
இன்னும் பல நடிகைகள் விபசாரம் செய்து வருவதாகவும் அவர்கள் தப்பித்துக்கொண்டு வருவதாகவும் அவர் கூறியதாகச் செய்திகள் வெளியாயின. இன்னும் பல நடிகைகளின் பெயர்களையும் அவர் கூறியதாகத் தகவல்கள் வந்தன. அவர் அதை மறுத்தார். தங்கள் பெயர்கள் வீணாக வெளி வந்துவிட்டதாகப் பல நடிகைகள் வருத்தம் கொண்டனர்.
தற்கொலை செய்துகொள்ளலாம் என்ற அளவுக்குப் போய்விட்டதாக அவர்கள் பேட்டி கொடுத்தனர். நடிகர் சங்கமும் கூட்டம் கூட்டி அது போன்ற செய்திகள் வெளியானதற்குக் கண்டனம் தெரிவித்தது. காவல்துறையிடமும் அது பற்றி புகார் அளிக்கப்பட்டது. பல்வேறு நிலைகளில் இருக்கும் போட்டிதான் புவனேஸ்வரி கைது செய்யப்பட்டதற்கு காரணம் என்று சில பத்திரிகைகள் எழுதின.
உடலின் மகிழ்வு இன்னும் அடையாளம் காணப்படாத ஒரு அரசியலாக இருக்கிறது. பணம் பெறாமல் மகிழ்வு மட்டும் பெறும் பரிமாற்றங்கள் அனைத்துச் சமூகங்களிலும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. மகிழ்வு பெற பல அம்சங்கள் அடிப்படையாக இருக்கின்றன.
ஒரு ஆணும் பெண்ணும் சிலிர்ப்பு அடைந்துவிடுவதற்கு எத்தனையோ காரணங்கள் ஊக்கம் அளித்துவிடுகின்றன. உடல் கவர்ச்சி, வயது, அறிவு, ஆற்றல், ஆதரவு, பச்சாதாபம், ஒருமித்த கருத்து, இலக்கியம், கிரிக்கெட், தத்துவம் என்று ஏதேதோ அம்சங்கள் உடல்களை அருகே கொண்டுவந்துவிடுகின்றன. அத்தனை உடல்களும் ஒரே மாதிரியான மகிழ்வைத்தான் பெருகின்றனவா என்று சொல்ல முடியாது.
மகிழ்வு அடைந்து முடிந்த பின்னால் மனதில் தேங்கும் மகிழ்வின் நினைவுக்கு ஒரு சார்பு இருந்துவிடுகிறது. அதற்குப் பின்னணியாக பல நியாயங்கள் சேர்ந்துவிடுகின்றன. ஒரு விபசாரியிடம் சென்றால்கூட அவள் தனக்கு மட்டும்தான் சொந்தம் என்று எண்ணுபவன் இந்திய ஆண் என்று ஜோக்குகள் தொடர்ந்து எழுதப்பட்டு வருகின்றன.
ஒரு திரை நட்சத்திரம் பல மனங்களில் குடிகொண்டுவிடுகிறது. சின்னத் திரையில் தோன்றுபவர்களுக்கும் தனியாக ஒரு நட்சத்திர நிலை வந்துவிடுகிறது. வெள்ளித்திரை நட்சத்திரங்களுக்கு ஒரு பெரிய பிம்பம் உருவாகிவிடுகிறது.
அவர்களின் உடல்கள் நிஜ வாழ்வின் உடல்களைவிட பெருமதிப்பு கொண்டவையாக ஒரு கற்பனை மனங்களில் பதிக்கப்படுகிறது. இதை ஊடகங்களும் சமூக எந்திரமும் தொடர்ந்து செய்துவருகின்றன. திரையில் தோன்றும் பெண் நட்சத்திரங்களின் உடலுக்கு பெரிய தொகை கொடுக்க வேண்டும் என்ற மன நிலை தொடர்ந்து மறுவுருவாக்கம் செய்யப்படுகிறது.
திரை பிம்பங்களின் உடல்கள் நிஜ வாழ்வின் மனிதர்கள் தராத மகிழ்வைத் தரும் என்ற கற்பனை உடலில் விதைக்கப்படுகிறது. மகிழ்வின் இறுதியில் பிம்பத்தின் மகிழ்வு அடைந்த சாத்தியம் கட்டவிழ்க்கப்படுகிறது.
விபசார கைதுகள் ஊடகங்களில் தனிக் கவனம் பெறுகின்றன. தடுக்கப்பட்ட மகிழ்வைத் தந்தவர்கள், பெற்றவர்கள் என்று தனி முக்கியத்துவம் தரப்படுகிறது.
தடுக்கப்படுவதால் மகிழ்வின் தன்மை பல மடங்கு பெரிதாக்கப்படுகிறது. பூனைக் கண் புவனேஸ்வரியோ, சாதாரணக் கண் ஈஸ்வரியோ, யாராக இருந்தாலும் உடல் என்பது ஒரு மகிழ்வு அல்லது பணம் என்ற விலைக்கானதாக அடையாளம் காணப்படுகிறது. அதிலிருந்து யாருக்கும் விடுதலை இல்லை. உடலே பிம்பங்களின் சிறையாக இருக்கிறது. அதற்காகத்தான் பல சிறைகள் தொடர்ந்து உடல்களுக்காகக் காத்திருக்கின்றன.