6 இளம் பெண்களுக்கு காதல் வலை வீசி, அதில் 4 பேரை திருமணம் செய்து பணத்தை கறந்த மன்மதன் பஷீரை போலீஸார் கைது செய்துள்ளனர். பஷீர் தற்போது, பா.ம.க.வில் நகர பொருளாராக இருக்கிறார்.
சென்னை தி.நகரில், போரூரைச் சேர்ந்த 22 வயதாகும் உஷா (பெயர் மாற்றம்) தன்னுடைய தாயாருடன் ஷாப்பிங்கிற்கு வந்திருந்தார்.அப்போது மின்னல் வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று, உஷாவை குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றிக் கொண்டு பறந்தது. கூச்சலிட்ட உஷாவின் தாயார், மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.போலீஸ் துணை கமிஷனர் சரவணன், உதவி கமிஷனர் ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் உஷாவை கடத்தியவர்களை தேடினர்.இந்த சூழ்நிலையில் உஷாவை கடத்தியது அவரது காதல் கணவன் பஷீர் என்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
உஷாவின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் எனக்கருதிய போலீஸார், பஷீர் மற்றும் கடத்தல் கும்பலை பொறி வைத்து பிடிக்க முடிவு செய்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “உஷா, தென்னிந்திய அழகி போட்டியில் கலந்து வெற்றி பெற்றவர்.அதோடு மூன்று குறும்படங்களில் நடித்துள்ளார். தற்போது மூன்று திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார். உஷா குடியிருக்கும் பகுதியில் கேபிள் டிவி ஆபரேட்டராக பஷீர் வேலை பார்த்துள்ளார்.
அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பிறகு இருவரும் திருமணம் செய்துள்ளனர். பஷீருக்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த தகவல் உஷாவுக்கு தெரிந்ததும் அவரைவிட்டு பிரிந்து தாய் வீட்டுக்கு வந்துவிட்டார்.இருப்பினும் உஷாவிடம் அடிக்கடி பணம் கேட்டு பஷீர் தொந்தரவு செய்துள்ளார். சம்பவத்தன்று தி.நகரில் உஷாவை கடத்தி சென்ற பஷீர் மற்றும் அவருடைய நண்பர்கள், கோவா, கரூர் என பல இடங்களுக்கு சென்றுள்ளனர்.அப்போது பணத்துக்காக உஷாவை அவர்கள் சித்ரவதை செய்தாக தெரிகிறது.
பணத்தை கொடுப்பதாக உஷா உறுதி அளித்தன் பேரில், சென்னைக்கு அவர்கள் வந்துள்ளனர். இதையடுத்து பஷீர் மற்றும் அவரது நண்பர்கள் ராம்குமார், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்” என்றார். கேபிள் டிவி ஆபரேட்டரான பஷீர், ஒவ்வொரு வீட்டுக்கும் செல்லும் போது அங்குள்ள பெண்களிடம் கவர்ச்சியாக பேசுவார். அவரது பேச்சில் பல பெண்கள் வீழ்ந்துள்ளனர்.அரசு ஊழியரான ஒரு பெண்ணை முதலில் காதலித்து பஷீர் திருமணம் செய்துள்ளார்.
அடுத்து சினிமா துறையில் உள்ள துணை நடிகைக்கு காதல் வலை வீசி அவரையும் திருமணம் செய்திருக்கிறார்.மூன்றாவது இன்னொரு குடும்ப பெண்ணையும் திருமணம் செய்துள்ளார். கடைசியாக நடிகை உஷாவையும் அவர் திருமணம் செய்திருக்கிறார்.திருமணங்களை மறைத்து அவர்களுடன் சிறிது காலம் வாழ்ந்து விட்டு பணத்தை ஏமாற்றுவதே பஷீரின் வேலையாக இருந்து வந்துள்ளது.இதுதவிர இன்னும் இரண்டு இளம் பெண்கள், பஷீர் விரித்த காதல் வலையில் வீழ்ந்துள்ளனர். இவ்வாறு மன்மதனாக வலம் வந்த பஷீர், உஷாவால் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டு இருக்கிறார்.
பஷீர், பா.ம.க.வில் நகர பொருளாராகவும் பதவி வகிக்கிறார். அப்போது, அரசியல் முன்விரோதமாக நடந்த ஒரு கொலையில் பஷீர் மீது எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.பஷீரால் பாதிக்கப்பட்டவர்கள் பலர், புகார் கொடுக்க முன்வருவதில்லை. பஷீரை காவலில் எடுத்து விசாரித்தால் இன்னும் பல தகவல்கள் வெளியில் வரும்” என்றனர்.