பாலியல் வன்முறைகளுக்கெதிராக இலங்கையின் சகல இன மக்களும் ஒன்றிணைந்து போராடவேண்டும்! சாந்தி

வவுனியாவில் படுகொலை செய்யப்பட்ட 13 வயது மாணவி ஹரிஸ்ணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராகவும் சிறுவர்களை சித்திரவதை செய்து கொலை செய்வதையும் கண்டித்து முல்லைத்தீவில்பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகளுக் கெதிராக இலங்கையின் சகல இன மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்காந்தராசா அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கையில் தற்போது சிறுவர்களுக்கெதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஒரு வருடத்திற்குள் மன்னகுளத்தில் சரண்யா, புங்குடுதீவில் வித்தியா, கொட்டதெனியா சேயா தற்போது வவுனியாவில் ஹரிஸ்ணவி என சிறு பிள்ளைகள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர்.

 இவர்களுக்கு எதிராக குற்றம் செய்தவர்கள் உடனடியாக கண்டறியப்படல் வேண்டும். எத்தனை காலங்களுக்கு இந்நிலை தொடர்ந்து செல்லும் எங்களுடைய சமூகத்தில் பெண்களுக்கும் சிறுவர்களுக்கும் பாதுகாப்பற்ற சூழல் யாரால் உருவாகி வருகின்றது? எனவே, இந்த நிலைமைகள் இனிவருகின்ற காலங்களில் இவ்வாறான அநீதிகள் தொடராமல் இருக்க முற்றுப்புள்ளி வைக்கப்படல் வேண்டும். எமது சமூகம் தீய வழிக்கு செல்வதனை தடுக்கவேண்டும் அரை நூற்றாண்டு காலமாக எமது மண்ணில் எத்தனை அவலங்களை அழிவுகளை நாம் சந்தித்தள்ளோம்.

 எமது உரிமைகளுக்காக எத்தனை இழப்புக்களை சந்தித்தோம். அதனை விளங்கி எமது இனத்தின் மேன்மைக்காக நாம் ஒன்றுபட்டு நிற்கவேண்டும் கட்டுக்கோப்புடன் இருந்துவந்த எமது வட பகுதிகளில் தற்போது தலைவிரித்தாடும் இவ் சமூக அநீதிக்கெதிராக கிராமங்கள் தோறும் அனைவரும் விழிப்புணர்வு கொள்ளவேண்டும் பாலியல் வன்கொடுமை புரிவோர்க்கு எதிராக கடுமையான புதிய சட்டங்கள் உருவாக்கப்பட்டு அமுல்படுத்தப்பட வேண்டிய தேவை எழுந்துள்ளது என தெரிவித்தார்.