ஆந்திர வன அதிகாரிகள் கொலை வழக்கில் 287 தமிழர்கள் விடுதலை

ஆந்திர வனத்துறை அதிகாரிகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 287 தமிழர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 

 சேஷாலம் வனப்பகுதியில் கடந்த 2013 டிசம்பர் 13-ம் திகதி வனத்துறை அதிகாரிகள் ஸ்ரீதர், டேவிட் கருணாகரன் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த 435 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இவர்களில் 287 தமிழர்கள் உள்ளிட்ட 356 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், எஞ்சியவர்கள் இதுவரை தலைமறைவாக இருந்து வந்தனர். 

 இந்த வழக்கு விசாரணை திருப்பதி 3-வது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில், கைதானவர்கள் அனைவரும் கடந்த 2 வருடங்கள் 2 மாதங்களாக சிறையில் இருந்தனர். இந்நிலையில், இன்று சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியுள்ளது. நீதிபதி ராம்பாபு, வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரங்கள் இல்லாததாலும், சாட்சியங்கள் நிரூபிக்கப்படாததாலும் வழக்கிலிருந்து அனைவரும் விடுவிக்கப்படுகின்றனர் எனத் தீர்ப்பளித்துள்ளார். 

 அவர்களில் சிறையில் இருந்த வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த 5 தமிழர்கள் இறந்து போயுள்ளனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட 351 பேரில் தற்போது உயிருடன் இருக்கும் 351 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, இந்த வழக்கு தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆந்திர முதல்வருக்கு கடிதம் எழுதினார். இதன் மூலம் சுமார் 70 பேர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.