ஓடும் ரயிலில் இருந்து பொலிசாரால் தூக்கிவீசப்பட்ட இளம்பெண்: சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

உத்தரபிரதேசம் மாநிலத்தில் ஓடும் ரயிலில் இருந்து இளம்பெண் ஒருவர், ரெயில்வே பொலிசால் தூக்கி வீசப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் பிர்பும் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ரிதா தனது உறவினர்களுடன், கான்பூரில் வேலை செய்யும் தனது கணவர் பார்வேஸ் பாலை பார்க்க சென்றுள்ளார்.

ஹவுரா - அமிர்தசாரஸ் எஸ்பிரஸ் ரயிலில் சென்றபோது அதிகமான கூட்டம் இருந்ததால், ரிதா தனது 18 மாத குழந்தை காஜல், அப்பா மானிக் பால் மற்றும் சகோதரர் ஜெய்தீப் பால் ஆகியோருடன் பார்சல் பெட்டியில் ஏறியதாக கூறப்படுகிறது.

ரயில் வாரணாசி வந்ததும், ரயில்வே பொலிசார் பார்சல் பெட்டிக்குள் வந்து அவர்களிடம் பணம் கேட்டுள்ளனர்.

பணத்தை கொடுங்கள் இல்லையென்றால் ரயிலைவிட்டு இறங்குங்கள் என்று மிரட்டியுள்ளனர்.

பின்னர் அவர்களை ரயில் பெட்டியை விட்டு வெளியே தள்ள முயன்றபொது ரிதா எதிர்ப்பு தெரிவித்ததால் பொலிசார் அவரை வெளியே தள்ளியுள்ளனர்.

அச்சமயத்தில் ரெயில் புறப்பட்டுவிட்டதால் ஓடும் ரெயிலில் இருந்து வெளியே விழுந்த ரிதா பலத்த காயம் அடைந்துள்ளார்.

உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் ரயிலில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் மார்பில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.

மருத்துவர் ராஜேஸ் குமார் சிங் பேசுகையில், ரிதா மற்றும் ஜெய்தீப் என்று இரண்டு பேர் இங்கு அனுமதிக்கப்பட்டனர்.

ரயிலில் இருந்து தூக்கி எறியப்பட்ட ரிதா மார்பு பகுதியில் காயம் காரணமாக உயிரிழந்தார் என்று தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ரயில்வே பொலிசார் வழக்குபதிவு செய்து பொலிஸ் சரத் சந்திரா துபேயை அடையாளம் கண்டு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.