இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொண்டதாக கூறி இளம் காதலர்களை அடித்து உதைத்த சம்பவம் தொடர்பாக 3 பேரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் கடந்த நவம்பர் மாதம் பொது இடத்தில் நெருக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த இளம் காதலர்களை “கொரில்லா படை” என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் அடித்து உதைத்தனர்.
கலாச்சாரத்தை காப்பாற்றுவதாக கூறி இந்த அமைப்பு இதுபோன்ற செயல்களில் அடிக்கடி ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இளம் காதலர்கள் அடித்து உதைக்கப்பட்ட சம்பவம் நடந்து இரண்டு மாதங்கள் ஆனபோதிலும் அதன் காணொளி, சமீபத்தில்தான் வலம் வரத் தொடங்கியது.
இது தொடர்பாக, லாத்தூர் மாவட்டம் முருட் காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தற்போது மூன்று பேரை கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் மாநில உள்துறை இணை அமைச்சர் ராம் ஷிண்டேயின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
ஷிண்டே இது குறித்து கூறுகையில், இச்சம்பவம் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட பொலிஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டு இருக்கிறேன்.
இளம் காதலர்களை இப்படி அடித்து உதைப்பது நமது கலாச்சாரத்துக்கு ஏற்றதல்ல என்று கூறியுள்ளார்.