தந்தையை கட்டி அணைத்த மகளுக்கு 100 பவுண்ட் அபராதம்!

பிரித்தானியாவில் பிரதான விமான நிலையத்தின் அருகே வயது முதிர்ந்த தந்தையை கட்டியணைத்த மகளுக்கு 100 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பிரித்தானியாவின் ஜான் லெனான் விமான நிலையத்தில் இருந்து தமது தந்தையை அழைத்து வரும்பொருட்டு 44 வயதான ஜாகி கிரகெரி என்பவர் தமது கணவருடன் சென்றுள்ளார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த தந்தையை சில காலம் காணாமல் இருந்திருந்த கிரகெரி, பல நாட்களுக்கு பின்னர் கண்டதும் தந்தையை கட்டி அணைத்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்று ஒரு வாரம் கடந்த பின்னர் கிரகெரி குடும்பத்தினருக்கு விமான நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் வாகனத்தை நிறுத்தியதாக கூறி 100 பவுண்ட் அபராதம் கட்ட வலியுறுத்தி வந்துள்ள கடிதம் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 

 விமான நிலையத்தில் இருந்து வாகனமிருக்கும் பகுதிக்கு நடந்து வரும் தமது தந்தையை கண்டும் காணாமல் செல்வது எந்த வகையில் நியாயமாக இருக்க முடியும் என கேள்வி எழுப்பும் அவர், தடை செய்யப்பட்ட பகுதியாக விமான நிலைய நிர்வாகம் தெரிவிக்கும் குறிப்பிட்ட சாலையில் வெறும் 13 நொடிகள் மட்டுமே தாம் வாகனத்தை நிறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

 இச்சம்பவத்தால் அதிர்ச்சியும் ஆத்திரமும் அடைந்த கிரகெரி குடும்பத்தினர், விமான நிலையத்தின் சார்பில் அப்பகுதியை நிர்வகிக்கும் நிறுவனத்திடம் மேல்முறையீடு செய்துள்ளனர். ஆனால் தங்களது முடிவு இறுதியானது எனவும் அபராத தொகையை உடனே கட்ட வேண்டும் எனவும் அந்த நிர்வாகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.