கோயில்களுக்கு ஆடை அணிந்து செல்வதில் புதிய கட்டுப்பாடுகளை சென்னை உயர் நீதிமன்றம் விதித்துள்ளது.
இதற்கு புனிதம் போற்றும் காரணமாக இந்து அறநிலைய துறையின் விதிமுறைகள் முன்வைக்கப்படுகிறது.
இந்த கட்டுப்பாடுகள் தமிழகத்தின் சில கோவில்களில் ஏற்கெனவே இருந்தும் வருகிறது.
ஜனவரி 1ம் திகதியிலிருந்து நடைமுறைக்கு வந்துள்ள அந்த ஆடை கட்டுப்பாட்டின்படி, ஆண்களுக்கு ஜீன்ஸ், கைலி, பனியன், பெர்முடா சார்ட்ஸ், ஸ்கிர்ட்ஸ், ஸார்ட்ஸ் ஸ்லீவ்ஸ், பிடிப்பான லெக்கின்ஸ் போன்ற ஆடைகளுக்கு தடைவிதிக்கிறது.
தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களில் சிறிய மற்றும் பெரிய 6,000 கோவில்களில், நூற்றுக்கணக்கான அதிகாரிகளால் ஜனவரி 1ம் தேதி நுழைவாயிலில் சோதித்தும் அனுப்பப்பட்டது.
அந்த கட்டுப்பாட்டின் உட்கருத்து, இந்து மதம் சார்ந்த கோவில்கள் ஆசிரமங்கள், மடங்களுக்கு குறை ஆடையோடு செல்வதால், இனக்கவர்ச்சி தூண்டப்படுகிறது.
அதனால், பக்தர்களின் புனித நோக்கம் கெடுகிறது, ஆடை கட்டுப்பாட்டால் அதை தடுக்க முடியும் என அலயங்களின் அதிகார மையங்கள் கருதுகிறது.
அதற்கான கொள்கை நோக்கம் கோவில்களுக்கு வரும் இருபாலருக்குமே கடவுளின் தரிசன உணர்வு இருக்க வேண்டுமே தவிர, இருபாலரும் ஒருவரை ஒருவர் ஆசையோடு தரிசித்துக்கொள்ள கோவிலே ஒரு வாய்ப்பான இடமாக அமைந்துவிடக் கூடாது
என்பதுதான்.
ஆடை கட்டுப்பாட்டின் மீது சமூக ஆர்வலர்கள் வைக்கின்ற வாதங்கள்:
ஆடை கட்டுப்பாட்டால் மட்டுமே கோவிலின் புனிதத்தை பாதுகாத்திட முடியுமா? ஆடை குறைவின் காரணமாக ஆபாச உணர்வு எழுமானால் அது அணிபவர் குற்றமா? அணிந்தவரை பார்ப்பவர் குற்றமா?
நீதிமன்றம் அனுமதிக்கிற உடைகளில் மட்டும் அந்த உணர்வு ஏற்படாது என்பதற்கு என்ன உத்திரவாதம்?
பாலியல் உணர்வு மட்டும்தான் புனிதத்துக்கு கேடானதா?
பிறருக்கு தீங்கு செய்பவர்கள், லஞ்ச ஊழல் ஆசாமிகள், கொள்ளையர்கள், பிறர் பொருள், பிறர் மனைவியை அபகரித்தவர்கள், பெரிய மனிதர்களாக வலம்வரும் வஞ்சகர்கள், ஈயாத கஞ்சர்கள், கொலைகாரர்கள் இப்படி பலவிதமான தீயசெயல்கள், துர்குணங்கள் கொண்டவர்கள், வந்து வழிபடுகிறார்களே அவர்கள் மனங்களால் கோயிலின் புனிதம் கெடாதா? இதுபோன்ற சிந்திக்க வேண்டிய விஷயங்களை கேள்விகளால் தூண்டுகிறார்கள்.
விலைவாசியை ஏற்றுவதையும் விவசாயத்தை அழிப்பதையும் கூட நியாயப்படுத்தி பேசுபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனாலும், சமுக ஆர்வலர்களின் கேள்விகள் அப்படிப்பட்டதல்ல. அவர்கள் எதிராக உள்ள நியாயங்களையும் பின்விளைவுகளைப் பற்றியும் சரியாகவே பேசுவார்கள்.
கடவுள் புரிதல்:
மதம், கலாச்சாரம், பாரம்பரியம் சம்பந்தப்பட்டதுதான் கோயில்கள். ஆனால், மதங்கள் மட்டுமல்ல எந்த ஒன்று எல்லைகளை வைத்திருக்கிறதோ, அது கடவுளுக்காக என்று சொன்னாலும் கூட அதற்குள்ளாக நிச்சயமாக கடவுள் அடங்கிவிடுவதில்லை.
அவரவர் மதங்கள் அவர்களுக்கு கடவுளின் மார்க்கங்கள். என்றாலும், அத்தனை மதங்களிலும் கடவுள் இருக்கிறார் என்றுதான் அர்த்தம்.
மதங்களை கடந்த விஷயங்களிலும் கடவுள் இல்லாமல் இல்லை என்பது அந்த அர்த்தத்தின் வளர்ச்சி. இது சிந்திக்கும் யாவரும் புரிந்துகொள்ளக் கூடியதுதான்.
ஆடை கட்டுப்பாட்டில் சிக்கல்:
வெளியூர்களுக்கு வேறு வேலையாக விரும்பிய உடைகளில் செல்பவர்கள், அங்கு ஒரு கோயிலை கண்டால், தூய அன்போடு கடவுளை வணங்க தோணுவது இயல்புதான்.
அப்போது, நாம் அணிந்திருக்கும் உடை கோவிலுக்கு பொருந்தாவிட்டால் ஆண்டவனை தரிசிக்க முடியாமல் போகும் சூழல் ஏற்படுவது பரிதாபமே.
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என்பது சரியானது.
அதை மறுப்பவர்கள் கூட முதுகுக்கு பின் தான் செய்வார்கள்.
ஆலயத்தில் குருக்கள், பூசாரிகள் மேலாடைகள் இல்லாதிருப்பதிலும் திருத்தம் கொண்டுவரலாம். அவர்களே ஆடை விஷயத்தில் மற்றவர்களுக்கு முன்னோடியாகவும் இருக்கலாம்.
கலாச்சார புனிதம் காப்பது:
சிந்தனையாளர்களோடு கருத்து யுத்தம் செய்யும்போது கடவுள் உலகில் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளார் என்பதை ஏற்றுக்கொள்வது மதவாதிகளின் ஒரு முகம்.
அதேசமயம், ஆலயங்கள்தான் ஆண்டவன் இருப்பிடம் என்பதை உறுதியாக கடைப்பிடிப்பதிலும் தனி முகம் காட்டுவார்கள் அதற்கு பல காரணங்களும் வைத்திருக்கின்றனர்.
கோயில், கலாசார பாரம்பரியத்தின் ஒரு அடையாளம். அங்கு கடவுள் இருப்பது மதத்தை பின்பற்றும் சராசரி மக்களின் நம்பிக்கை.
அந்த வகையில் இந்த ஆடை கட்டுப்பாட்டால் மக்கள் நம்பிக்கைக்குரிய புனிதத்தை நிச்சயம் ஓரளவு காப்பாற்ற முடியும்.
ஒரு அலுவலகத்திற்கு கூட நாம் விரும்புகிற ஆடைகளை எல்லாம் போட்டுச் செல்ல முடியாது அங்கு ஆடை கட்டுப்பாடு உண்டு. அதைவிட மரியாதைக்கும் புனிதத்துக்கும் உரிய ஆலயங்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் வைப்பதை ஏற்கலாம்.
உடைகள் வெளிப்படையாக தெரிவதால் அதில் மாற்றம் கொண்டுவர முயற்சிக்கிறோம். அதேசமயம் மனங்களில் இருப்பது வெளியில் தெரியாது அதனால், அதைப்பற்றி கவலைப்படாமல் கடவுளின் பொறுப்பில் விட்டுவிடுகிறோம்.