கர்ப்பிணி தாயை பேருந்தியில் இருந்து தள்ளி விட்ட நபர்: காரணம் என்ன? (வீடியோ இணைப்பு)

ரஷ்யாவில் பேருந்தில் இருந்து கர்ப்பிணி தாய் ஒருவரை பயணி ஒருவர் வெளியே தள்ளி விட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ரஷ்யாவின் Vladivostok பகுதியில் பேருந்து பயணத்தினிடையே கர்ப்பிணி தாய் ஒருவர் தமது 3 குழந்தைகளுடன் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளப்பட்டுள்ளார். சம்பவத்தன்று இவர் பேருந்து பயணத்தினிடையே அசதியில் தூங்கியதாக கூறப்படுகிறது, அவரது 3 குழந்தைகளும் அப்போது பெரும் கூச்சலிட்டு சகபயணிகளுக்கு தொல்லை தந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவரது அருகாமையில் இருந்த இன்னொரு இளம்பெண், தூக்கத்தில் இருந்த கர்ப்பிணி தாயாரை எழுப்பி தமது குழந்தைகளை கட்டுப்படுத்த கூறியுள்ளார்.

 இதில் ஆத்திரமடைந்த அந்த பெண்மணி தூக்கத்தை கலைத்தவரை சரமாரியாக திட்டத் துவங்கவும் இருவரும் கூச்சலிட்டு சண்டையிட துவங்கியுள்ளனர். பின்னர் தாம் இறங்க வேண்டிய பகுதி வந்ததும் குழந்தைகளுடன் பேருந்தில் இருந்து வெளியேற முயன்றுள்ளார். இந்த களேபரங்களை கண்டுகொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென எழுந்து அந்த கர்ப்பிணி தாயாரை நடைபாதையில் சென்று விழும்படி எட்டி மிதித்துள்ளார்.

 பேருந்தில் இருந்து தள்ளிவிடப்பட்ட ஆத்திரத்தில் மீண்டும் எழுந்து நகரும் பேருந்தினுள் செல்ல எத்தனித்த அந்த பெண்மணியை, நடைபாதையில் இருந்த இன்னொரு நபர் பிடித்து நிறுத்தியுள்ளார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் அவரது குழந்தைகள் 3 பேரும் அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டே நின்றிருந்தனர். இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட பொலிசார் பேருந்தில் கூச்சலிட்டு சகபயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக வழக்கு பதிந்துள்ளனர்.