ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக, தெரியவந்துள்ளது.
2005 – 2006ம் ஆண்டு காலப் பகுதியில் மைத்திரிபால சிறிசேன அமைச்சராக இருந்தபோது, இந்தக் கொலை முயற்சி இடம்பெற்றுள்ளது.
பொலன்னறுவை - மன்னம்பிடிய பகுதியில் வைத்து, குறித்த நபர் குண்டு ஒன்றை வெடிக்க வைத்து இவ்வாறு அவரைக் கொலை செய்ய முற்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
இதற்காக பிரதிவாதிக்கு 10 வருடங்கள் சிறைதண்டனை மற்றும் பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து பொலன்னறுவை மேல் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டது.
பின்னர் இந்த தண்டனையை எதிர்த்து அவர் தனது சட்டத்தரணி மூலம் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்தநிலையில் குறித்த மேன்முறையீட்டை தள்ளுபடி செய்ய அனுமதிக்குமாறு கோரி பிரதிவாதி சார்பில் ஆஜரான சட்டத்தரணி இன்று நீதிமன்றத்தில் குறிப்பிட்டதாக, எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளமையாலேயே இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக சட்டத்தரணி, இதன்போது கூறியுள்ளார்.
இதனையடுத்து விடயங்களை ஆராய்ந்த மேன்முறையீட்டு நீதிமன்றம், பிரதிவாதியின் முறையீட்டை தள்ளுபடி செய்ய அனுமதியளித்துள்ளதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.