புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணிய தமிழர்களுக்கு எச்சரிக்கை

விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புகளைப் பேணியவர்கள் இலங்கைக்கு செல்வதை தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது. 


இந்த எச்சரிக்கையை சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று விடுத்துள்ளது. இலங்கையின் சமகால அரசாங்கத்திலும் வெள்ளைவான் கடத்தல்கள், சித்திரவதைகள், பாலியல் சித்திரவதைகள் தொடர்வதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஐ.நா செயலாளர் நாயகம் பான் கீ மூனின் மூவர் அடங்கிய நிபுணர் குழுவின் உறுப்பினராக கடமையாற்றிய தென்னாபிரிக்க மனித உரிமைச் சட்ட நிபுணர் யஸ்மின் சூக்கா தலைமையிலான சர்வதேச நீதிக்கும், உண்மைக்குமான திட்டம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. புலிகள் அமைப்புடன் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ தொடர்புபட்டவர்கள் இலங்கைக்குத் திரும்பிச் சென்றால் அவர்கள் இவ்வாறான சித்திரவதைகளுக்கு ஆளாகலாம் என்று அந்த அமைப்பின் ஆய்வாளரான சிரேஷ்ட ஊடகவியலாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற இவ்வாறான சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் சிலவும் ஆதாரமாக வெளியிடப்பட்டுள்ளது. இரண்டாம் இணைப்பு மைத்திரி - ரணில் ஆட்சியிலும் கடத்திச் செல்லுதல் மற்றும் இரகசிய சித்தரவதை கூடங்களில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து குற்றம் சுமத்தியுள்ள சர்வதேச மனித உரிமை அமைப்பு, விடுதலைப் புலிகளுடன் ஏதோ ஒருவகையில் தொடர்பை வைத்திருந்த வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் இலங்கைக்கு திரும்ப செல்வது ஆபத்தானது என எச்சரித்துள்ளது. எந்தளவுக்கு விலகியிருந்தாலும் மிக நீண்டகாலமாக இருந்தாலும் கீழ் மட்ட செயற்பாட்டளராக இருந்தாலும் விடுதலைப் புலிகளுடன் ஏதேனும் தொடர்புகளை கொண்டிருந்தால், திரும்பி ஊருக்கு செல்வது பாதுகாப்பானதல்ல என யஷ்மின் சூகா தலைமையிலான உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளை வைத்திருந்தனர் என சந்தேகிக்கப்படும் ஒருவர் இருப்பாரானால் அவர் கடத்திச் செல்லப்படவும் சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பாரதூரமான ஆபத்து காணப்படுகிறது எனவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அதேவேளை தற்போதைய ஆட்சிக்காலத்தில் கடத்திச் செல்லப்பட்ட 20 பேர், அவர்களுக்கு வழங்கப்பட்ட பாலியல் சித்திரவதை விபரிக்கும், பிரித்தானியாவை தலைமையிடமாக கொண்ட சித்திரவதைகளில் இருந்து விடுதலை என்ற அமைப்பு, மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடம் பூர்த்தியாகும் நிலையில், வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் 7 பேர் இவ்வாறான துன்பங்களுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. அதேவேளை சித்திரவதை செய்யப்பட்டதற்கான அடையாளங்களுடன் கூடிய புகைப்படங்கள் மற்றும் சித்தரவதை கூடங்கள் இருப்பதாக குற்றம் சுமத்தி அவை தொடர்பான வரைப்படங்களுடன் உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு வெளியிட்டுள்ள ‘Silenced: survivors of torture and sexual violence in 2015’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள 45 பக்கங்களை கொண்ட அறிக்கையில், மேலும் 5 பேர் அனுபவித்த பாலியல் வன்முறை அடிப்படையாக கொண்ட சித்திரவதை கூடங்கள் பற்றிய விபரங்களை வெளியிடப்பட்டுள்ளது. இந்த இரண்டு அமைப்புகளுக்கு கடந்த வருடம் 32 பேர் தகவல்களை வழங்கியுள்ளனர். பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான தமிழர்களில் பெரும்பாலானவர்களின் மூன்றில் இரண்டு வீதத்தினர் ஆண்கள் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் பேச்சாளர் பிரான்ஸிஸ் ஹெரிசன் கூறியுள்ளார். இவர்களில் சிங்கள இராணுவ அதிகாரி ஒருவரும் அடங்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அறிக்கையின் படி இலங்கை பாதுகாப்பு படை உறுப்பினர்களே இந்த பாலியல் வன்முறைகளை செய்துள்ளனர். இந்த குற்றத்தை செய்தவர்களில் புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவ புலனாய்வுப் பிரிவின் உயர் அதிகாரிகளும் அடங்குகின்றனர். இலங்கை பாதுகாப்பு படையினர் மற்றும் காவற்துறையினர் மேற்கொள்ளும் சித்திரவதைகள் சம்பந்தமாக நடவடிக்கை எடுப்பதை முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியதாக கருத வேண்டும் என சித்திரவதைகளில் இருந்து விடுதலை அமைப்பு கூறியுள்ளது. தொடர்ந்தும் 4 வருடங்களாக நடந்தது போல், 2015 ஆம் ஆண்டிலும் சித்திரவதைகளுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக அனுப்பட்டவர்களில் அதிகளவானவர்கள் இலங்கையில் இருந்தே அனுப்பபட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. இலங்கை இராணுவம் மற்றும் புலனாய்வுப் பிரிவு சித்திரவதைகளை மேற்கொள்வது குறித்த மருத்துவ ரீதியான சாட்சியங்கள் தம்மிடம் இருப்பதாக அந்த அமைப்பின் பேச்சாளர் சோன்யா ஸ்கீடிஸ் தெரிவித்துள்ளார். விசாரணை நடத்திய நபர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு கைகொடுக்கும் புகைப்படம் ஒன்றும் சித்திரவதை கூடத்தில் இருந்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் தமிழர்கள் பற்றி வேவுப்பார்க்கப்படுவதுடன் குறிப்பாக வன்னியில் இரந்து தகவல்களை வழங்கும் தமிழ் ஒற்றர்கள் அடங்கிய விரிவான வலையமைப்பும் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. நாட்டுக்குள் சென்ற ஒருவரை கடத்திச் செல்லும் முன்னர் அரச புலனாய்வு சேவைகள் சில நாட்கள் தயார் நிலையில் இருக்கும் எனவும் விமான நிலையத்தில் இருந்து ஆபத்து இன்றி வெளியேறுவது எதிர்கால பாதுகாப்புக்கான உத்தரவாதம் அல்ல என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும் வெள்ளை வான் இன்னும் செயற்பாட்டில் இருப்பதான் கவலைக்குரிய விடயம் என உண்மை மற்றும் நீதிக்கான சர்வதேச அமைப்பின் தலைவர் யஷ்மின் சூகா கூறியுள்ளார்.