மத்திய பிரதேச மாநிலத்தில் மூதாட்டி ஒருவர் மீது வானத்தில் இருந்து ஐஸ் கட்டி விழுந்ததால் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் போபாலில் வசித்துவந்த ராஜ்ராணி (60) என்ற மூதாட்டியின் மீது ஐஸ் கட்டி விழுந்ததில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதையடுத்து, அருகாமையில் வசிப்பவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
ஐஸ் கட்டியானது வீட்டு கூரையின் மீது பட்டு மூதாட்டி மீது விழுந்ததால் அவர் உயிர்பிழைத்தார், இல்லையென்றால் அவர் உயிர் இழந்ததிருப்பார் என அருகில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால் வானத்தில் இருந்து எப்படி ஐஸ் கட்டி விழுந்திருக்கும் என்று மக்கள் குழம்பிக்கொண்டிருந்த நிலையில், இது தொடர்பாக விமான போக்குவரத்து நிபுணர் ஒருவர் கூறியதாவது, ‘‘விமானத்தின் கழிவறையில் கசிவுகள் ஏற்பட்டு வெளியேறும் கழிவுநீர் திரவ வடிவில் இருந்தாலும், அது அங்கிருந்து கீழே விழுவதற்குள் வெப்பநிலை மாற்றம் காரணமாக உறைந்து ஐஸ்கட்டியாக மாறிவிடும்.
விமான துறை ப்ளு ஐஸ் என்று இதனை அழைக்கின்றனர்,
இந்த ஐஸ் கட்டி விழுந்ததன் காரணமாக சம்பந்தப்பட்ட நபர் காயமடைந்து இருந்தால் விமான போக்குவரத்து விதிகளின்படி பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து புகார் எதுவும் வராத காரணத்தால் விசாரணை எதுவும் நடத்தப்படவில்லை என்று போபால் மாவட்ட ஆட்சியர் ஏகே சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து விமானபோக்குவரத்து இயக்குனர் ஜெனரல் மற்றும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் ஜெனரலுக்கு புகார் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.