பெண் வைத்தியர் ஒருவர் தொடர்ந்து 2 வருடகாலமாக கர்ப்பமாக உள்ளாரென சந்தேகிக்கும் சம்பவமொன்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.
நெடுந்தீவு மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு மத்திய அரசாங்கத்தினால் பணிக்கு அமர்த்தப்பட்ட வைத்தியரை ,கர்ப்பமாக இருக்கிறாரென காரணம் காட்டி,தற்துணிவின் அடிப்படையில் வேறுஇடத்திற்கு மாற்றியுள்ளார் யாழ் மாவட்ட பிராந்திய வைத்திய சுகாதார அதிகாரி.
இதனால் நெடுந்தீவில் வாழும் பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பெரும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளனர்.
நெடுந்தீவில் கடைமைபுரிவதற்காக சுகாதார அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட பெண்வைத்தியர் தற்போது காரைநகர் வைத்தியசாலையில் கடமை புரிந்துவருகின்றார்.
எனினும் அவருக்கான சம்பளம் நெடுந்தீவு வைத்தியசாலையில் இருந்தே வழங்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2வருடங்களாக இவ்வாறு பணிபுரிவதற்கு சட்டரீதியற்ற முறையில் சுகாதார வைத்திய அனுமதியளித்திருப்பதனை உடனடியாக விசாரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கர்ப்பத்தினை காரணம் காட்டி கொடுக்கப்பட்ட இந்த சட்டபூர்வமற்ற இடமாற்றம் கிட்டத்தட்ட 2வருடங்களாக ,குறித்த பெண்வைத்தியர் கர்ப்பமாக இருப்பதாக கருதப்படுகின்றது.
இவ்வாறு வழங்கப்படும் இடமாற்றம் மருத்துவசபையினால் அங்கீகரிக்கப்படவேண்டும்.
அத்துடன் இது சுகாதார அமைச்சிற்கு தெரியப்படுத்தப்படவேண்டும்.
இவ்வாறில்லாமல் கர்ப்பமாக இருந்தால் அங்கு வேலை செய்யமுடியாதென கூறமுடியாது.
நெடுந்தீவில் கர்ப்பவதிகள் இருப்பது இந்தபிராந்திய சுகாதார வைத்திய அதிகாரிக்கு தெரியாதா?
எனவே இவரை உடனடியாக நெடுந்தீவில் பணிபுரியவைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டுமென அண்மையில் நடைபெற்ற அபிவிருத்திக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது..
அத்துடன் இவர் இதுவரை நெடுந்தீவில் கடமை புரியாத காரணத்தினால் , 2வருடங்களிற்கு அங்கு கட்டாயபணிபுரியவேண்டிய கடமைப்பாடு இந்த பெண் வைத்தியருக்கு உள்ளது.
மக்களின் நலன் கருதி எத்தனையோ சிங்கள வைத்தியர்கள் வடக்கு கிழக்கில் பணிபுரிந்துவரும் நிலையில் ஒரு தமிழ் வைத்தியருக்கு ஏன் தமிழ் பிரதேசத்தில் வேலைசெய்யமுடியாதென மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மாவட்டசுகாதார வைத்திய அதிகாரியின் இந்த செயற்பாட்டினால் இதுவரை நிரந்தரமாக வைத்தியர்கள் எவருமின்றி நெடுந்தீவு மக்கள் மிகவும் அவதியுற்றுவருகின்றனர்.
மக்கள் நலனை முதன்மையாக கொண்டு செயற்படவேண்டிய மாவட்டசுகாதார வைத்திய அதிகாரி இவ்வாறு செயற்படுவது குறித்து மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.
இப்பெண் வைத்தியர் ரஸ்யாவிலுள்ள ஒரு மருத்துவபீடத்தில் கற்றே மருத்துவராகியமை குறிப்பிடத்தக்கது.
கடமை நேரத்தில் ஏற்பட்ட ஓர் குழந்தையின் உயிரிழப்பு சம்பந்தமான, இவருக்கு எதிரான விசாரணை ஒன்று நிலுவையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
அதேவேளை இவரதும், இவரது முறையற்ற இடமாற்றத்திற்கு முக்கிய காரணமான முன்னாள் பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரியின் இம்மோசடிச்செயற்பாடும் , அர்ப்பணிப்புடன் தொழில் புரியும் வெளிநாட்டில் கல்விகற்ற பல மருத்துவர்களுக்கு ஓர் இழுக்கை ஏற்படுத்தும் சம்பவமாக அமைந்துள்ளது.