பிரித்திகா திருநங்கைகள் முன்னேற்றத்துக்காக பாடுபடப்போவதாக அறிவிப்பு

சேலம் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினிக்கு உதவி ஆய்வாளருக்கான பணி ஆணை இன்று வழங்கப்பட்டது.

 சேலம் மாவட்டம் கந்தம்பட்டி பகுதியை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாசினி தமிழக காவல்துறையில் உதவி ஆய்வாளர் பதவிக்கு விண்ணப்பித்திருந்தார். எனினும் திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. 

 பின்னர் பல்வேறு நீதிமன்ற போராட்டங்களுக்கு பிறகு அவர் அனைத்து தேர்வுகளில் வெற்றிபெற்றார். இந்நிலையில் சேலம் மாநகர காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆணையாளர் சுமித் சரண் கலந்து கொண்டு பிரித்திகா யாசினி உள்ளிட்ட 22 பேருக்கு உதவி ஆய்வாளருக்கான பணி ஆணைகளை வழங்கி பாராட்டுக்களைத் தெரிவித்தார். 

 பணி ஆணை பெற்றவர்களுக்கான பயிற்சி, வண்டலூர் அருகே உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் வரும் 26-ம் தேதி முதல் தொடங்க உள்ளது. பணி ஆணை கிடைத்தபிறகு செய்தியாளர்களிடம் பிரித்திகா யாசினி பேசியதாவது, இந்தியாவில் முதல் முறையாக உதவி காவல் ஆய்வாளர் பணிக்கு திருநங்கையான நான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு முன்னுரிமை கிடைக்க பாடுபடுவேன் என்று தெரிவித்துள்ளார்.