மதுரையில் மேம்பாலத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வாலிபர், பாலத்தில் இருந்து தப்ப முயன்ற போது மின்சார ரயிலுக்கான மின் கம்பி மீது உரசியதில் உயிரிழந்துள்ளார்.
மதுரை எல்லீஸ்நகர் மேம்பாலத்தில் நேற்று மதியம் வடமாநிலத்தை சேர்ந்த சுமார் 25 வயது வாலிபர் ஒருவர் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்ட நிலையில், அங்கு பொலிசாரும், தீயணைப்பு படையினரும் விரைந்து சென்றுள்ளனர்.
அந்த வாலிபரை மீட்பு படையினர் கீழே இறங்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.
ஆனால் அந்த வாலிபர் கீழே இறங்கவில்லை. மேலும் அவர் பேசிய மொழி மீட்பு படையினருக்கு புரியவில்லை.
தீயணைப்பு வாகனத்தில் உள்ள ஏணி மூலம் தீயணைப்பு வீரர்கள் ஏறி அவரை மீட்க முயன்ற போது கீழே குதித்து விடுவதாக அந்த வாலிபர் மிரட்டியுள்ளார்.
அந்த வாலிபர் கீழே குதித்தால் அடிபடாமல் இருக்க மேம்பால பகுதியிலும்,
ரயில்வே தண்டவாள பகுதியிலும் தீயணைப்பு வீரர்கள் வலை விரித்துள்ளனர்.
இதனால் பெரியார் பேருந்து நிலைய பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னர் அந்த வாலிபர் தன்னிடம் இருந்த செல்போனை எடுத்து யாரிடமோ தொடர்பு கொண்டு நீண்ட நேரம் பேசியுள்ளார்.
மாலை சுமார் 5.30 மணியளவில் திடீரென்று பாலத்தில் இருந்து அந்த வாலிபர் ரயில்வே தண்டவாளப் பகுதியில் தீயணைப்பு படை வீரர்கள் விரித்து வைத்து இருந்த வலையில் குதித்துள்ளார்.
ஆனால் அவர் ரயில்களுக்கான உயர் மின் அழுத்த மின்சார கம்பிகள் மீது உரசியதால் மின்சாரம் தாக்கி கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
மேலும், சிறிது நேரத்தில் அவர் அந்த இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
அந்த வாலிபர் யார், எந்த மாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.
மேலும், இந்த சம்பவம் குறித்து திடீர்நகர் பொலிசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.