"மீண்டும் இந்தப் பாதையால் வர வேண்டாம், சென்று சாகுங்கள்" என, நடுக்கடலில் வைத்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்ட இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் அவுஸ்திரேலிய கடற்படையினர் குறிப்பிட்டதாக, தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் காரணமாக, ஆபத்தான கடல்வழிப் பயணத்தை மேற்கொண்ட இளம் பெற்றோரே இந்த விடயத்தை வௌியிட்டுள்ளனர்.
இந்தோனேசிய தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்களிடம் நடத்தப்பட்ட இரகசிய விசாரணைகளின் போதே அவர்கள் இவ்வாறு கூறியுள்ளனர்.
பிரித்தானிய ஊடகவியலாளர் ஒருவர் மேற்குத் தீமோரிலுள்ள குப்பங் நகரிலுள்ள முகாம் (Kupang City, West Timor) ஒன்றில், குறித்த தம்பதி உள்ளிட்ட பலரிடம் இவ்வாறு இரகசிய விசாரணைகளை மேற்கொண்டதாக வௌிநாட்டு ஊடகம் ஒன்று செய்தி வௌியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட வேளை, சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுக்கு பணம் வழங்கி, படகுகளை நாட்டுக்குள் கொண்டு வராது திருப்பி அழைத்துச் செல்லுமாறும் கடற்படையினர் கோரியதாக புகலிடக் கோரிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.