சென்னையில் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் நடிகர், நடிகையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
ராமாபுரம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் பள்ளியின் அருகே குப்பைத் தொட்டியில் அருகே ஜனவரி 5-இல் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பெண் சடலம் கிடந்தது.
விசாரணையில் அவர் போரூர் அருகே உள்ள மதநந்தபுரம் மங்கல லட்சுமி நகரைச் சேர்ந்த சசிரேகா(30) என்பது தெரியவந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த பொலிசார், சசிரேகாவுடன் வாழ்ந்து வந்த ரமேஷ் மற்றும் அவருடன் இருந்த லக்கியாவிடம் விசாரணை நடத்தினர்.
வில்லன் நடிகர் ரமேஷ் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தில், எனக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் 2011ம் ஆண்டு திருமணம் நடந்தது.
சென்னை குரோம்பேட்டை அனகாபுத்துாரில் எனது மனைவி மாமியார் ஆகியோருடன் வசித்து வந்தேன்.
ஏலச்சீட்டு தொழில் செய்து வந்த எனக்கு கடன் சுமை ஏற்பட்டது. இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு வந்தது. இதனால் ஆத்திரமடைந்த எனது மனைவி, மாமியார் ஆகியோர் துாக்குப்போட்டு தற்கொலை செய்துக்கொண்டனர்.
தனிமைப்படுத்தப்பட்ட நான் வடபழனியில் உள்ள எனது சித்தப்பா வீட்டில் தங்கினேன். பணத்தேவை ஏற்பட்டதால் வெளிநாட்டுக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பல நபர்களிடம் ரூ.70 லட்சம் வரையில் வசூல் செய்துவிட்டு காவல்துறையினர் தேடியதால் தலைமறைவாகினேன்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சசிரேகாவை மடிப்பாக்கத்தில் வைத்து சந்தித்தேன். அவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார். எனக்கு சினிமா பிரமுகர்கள் பலரிடம் பழக்கம் இருந்து வந்ததால் அவருக்கு ஓரிரு படங்களில் நடிப்பதற்கு சான்ஸ் வாங்கிக் கொடுத்தேன்.
இந்தப்பழக்கம் எங்களுக்குள் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டோம். சசிரேகா ஏற்கனவே திருமணம் ஆனவர். 8 வயதில் ஒரு மகன் உள்ளான்.
அவரது கணவர் சாலமன் பிரபு கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். நான், சசிரேகா, அவரது மகன் மூவரும் மடிப்பாக்கத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினோம்.
இந்நிலையில் எனக்கு வளசரவாக்கத்தை சேர்ந்த லக்கியா (22) என்ற பெண்ணுடன் நெருக்கம் ஏற்பட்டது. இந்த விஷயம் சசிரேகாவுக்கு தெரியவந்ததும் என்னிடம் தகராறு செய்தார். இது தொடர்பாக மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் அவரது மகனை நான் கடத்தி சென்று விட்டதாக செப்டம்பர் மாதம் புகார் அளித்தார்.
காவல்துறையினர் எங்கள் இருவரையும் அழைத்து சமாதானமாக பேசி சேர்த்து வைத்தனர். இதனையடுத்து நான் மனைவி சசிரேகா உடன் குன்றத்தூர் அருகே உள்ள மதனந்தபுரம் பகுதியில் வீடு எடுத்து தங்கினேன்.
லக்கியாவின் தொடர்பை விடமுடியாததால் மனைவி இல்லாத சமையத்தில அவரை அடிக்கடி வீட்டுக்கு அழைத்து வருவேன்.
கடந்த ஜனவரி மாதம் 4ம் தேதி லக்கியாவுடன் சேர்ந்து இருந்த போது சசிரேகா பார்த்துவிட்டார்.
என்னிடம் தகராறு செய்ததோடு, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்போவதாக மிரட்டினார். லக்கியாவை விட்டுவிட்டு தன்னுடன் வரும்படி அழைத்தார். அதற்கு நான் சசிரேகாவை சமாதானப்படுத்தி மதநந்தபுரத்திலே தங்க வைத்தேன்.
அன்றைய தினம் இரவு லக்கியா உடன் சேர்ந்து எனது மனைவியை கழுத்தை நெரித்து கொன்றேன். பின்னர் அவரது தலையை வெட்டி கெருகம்பாக்கம் அருகிலுள்ள ஏரியில் தலையை வீசிவிட்டு உடலை ராமாபுரம் அருகிலுள்ள குப்பை தொட்டியில் போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்று கூறியதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.