கொழும்பு காலி முகத்திடலில் நேற்று கொண்டாடப்பட்ட நாட்டின் 68 ஆவது தேசிய சுதந்திர தின விழாவில் தேசிய கீதம் சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பாடப்பட்டமையானது அனைவரையும் கவர்ந்த விடயமாக அமைந்தது.
அத்துடன் தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டபோது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மகிழ்ச்சி பரவசத்துடன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற நேற்றைய சுதந்திர தின நிகழ்வில் முதலில் சிங்களத்தில் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது. பின்னர் நிகழ்வு நிறைவுறும்போது தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்பட்டது.
இந்நிலையில் முதலில் சிங்களத்தில் மட்டும் தேசியக் கீதம் இசைக்கப்பட்டபோது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த தமிழ் பேசும் தலைவர்கள் முகம் சுளித்துக்கொண்டிருந்ததுடன் நேரடி ஒளிபரப்பை பார்த்த பொது மக்களும் உற்சாகம் இழந்தனர்.
எனி்னும் நிகழ்வின் இறுதியில் கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி மாணவிகள் தேசியக் கீதத்தை தமிழ் மொழியில் இசைத்தனர்.
இதனையடுத்து நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் மற்றும் மலையக கட்சிகளின் பிரதிநிதிகள் முகங்கள் பிரகாசித்ததை அவதானிக்க முடிந்தது.
தேசிய கீதம் தமிழ் மொழியில் இசைக்கப்பட்டபோது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்மந்தன் மகிழ்ச்சி பரவசத்துடன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் காணப்பட்டார்.
மேலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் முகங்களிலும் மகிழ்ச்சி கரைபுரண்டோடியதை அவதானிக்க முடிந்தது.
அத்துடன் 68 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வுகளின் நேரடி ஒளிபரப்புக்களை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் மத்தியிலும் தேசிய கீதம் தமிழில் இசைக்கப்பட்டபோது பரவசம் ஏற்பட்டதை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் 1949 ஆம் ஆண்டு கொண்டாடப்பட்ட முதலாவது தேசிய சுதந்திர தினத்தில் தமிழிலும் தேசியக் கீதம் இசைக்கப்பட்டது.
அதன் பின்னர் சில சந்தர்ப்பங்களில் தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்பட்டது.
ஆனால் கடந்த பல தசாப்தங்களாக தேசியக் கீதம் சுதந்திர தின நிகழ்வில் இசைக்கப்படவில்லை. அந்தவகையில் நேற்றைய தினமே இவ்வாறு தேசியக் கீதம் தமிழில் இசைக்கப்பட்டமை விசேட அம்சமாகும்.
மேலும் தமிழில் தேசியக் கீதம் இசைக்கப்படுவதற்கு ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்த நிலையிலும் சுதந்திர தின நிகழ்வில் தேசியக் கீதம் இசைக்கப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை அரசாங்கம் எடுத்திருந்தது.
68 ஆவது சுதந்திர தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம நீதியரசர் சபாநாயகர் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முப்படை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.