முழங்காவில் மகாவித்தியாலய ஆசிரியர்கள் தங்கியுள்ள விடுதிக்கு நள்ளிரவில் செல்லும் படையினர் விடுதிக் கதவுளைத் தட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இடம்பெற்றது என்பதைப் பாடசாலை அதிபர் உறுதிப்படுத்தினார்.இது குறித்து முகாம் பொறுப்பதிகாரிக்கு முறையிட்டுள்ளதாகவும், குறித்த படையினரை இடமாற்ற நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்துள்ளதாகவும் பூநகரிக் கோட்டக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.முழங்காவில் மகாவித்தியாலய ஆசிரியர் விடுதிகளின் கதவுளை நள்ளிரவில் படையினர் தட்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனால் ஆசிரியர்கள் அச்சம் காரணமாக விடுதிகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகின்றது. முழங்காவில் மகாவித்தியாலயத்துக்கு அருகில் 65ஆவது பிரிகேட் படையணியின் இராணுவ முகாம் ஒன்று உள்ளது.இதில் உள்ள இராணுவத்தினர் பாடசாலையில் கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபடும் ஆசிரியர்கள் தங்கியுள்ள விடுதிக்குச் சென்று கதவுகளைத் தட்டியதால் பீதியடைந்த ஆசிரியர்கள் இது குறித்து உரிய தரப்புக்களுக்கு முறைப்பாடு செய்துள்ளதுடன் விடுதியை விட்டு வெளியேறியுள்ளனர்.
இது தொடர்பாகப் பூநகரி கோட்டக்கல்விப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, அவ்வாறான சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக அருகில் உள்ள இராணுவ முகாம் அதிகாரியின் கவனத்துக்குக் கொண்டு சென்றபோது அவர் வருகை தந்து பார்வையிட்டுத் தமது இராணுவத்தினரின் சப்பாத்து அடையாளம் எனத் தெரிவித்ததுடன், அவர்களை இடமாற்றம் செய்வதாகவும் தெரிவித்துச் சென்றார் எனவும், எனினும் இதுவரை அவர்கள் இடமாற்றப்படவில்லை எனவும், ஆசிரியர்கள் அங்கு தங்குவதற்குத் தயங்குவதால் மாணவர்களின் கல்வி நிலை பாதிப்படையும் எனவும் தெரிவித்தார்.
இது குறித்துப் பாடசாலை அதிபருடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, மேற்படி சம்பவம் இடம்பெற்றதாகவும், இது தொடர்பாக இராணுவ அதிகாரி குறித்த படையினரை இடம்மாற்றியுள்ளதாகவும், விடுதியின் வேலியை அடைத்துத் தருவதாக கூறியுள்ளதாகவும் தெரிவித்தார்.