யுத்தம் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த பல வருடங்களாக தொடரும் காட்டு யானைகளின் தாக்குதல்களால் மீள்குடியேறிய பல கிராமங்களைச் சேர்ந்த மக்கள் சொல்லொண்ணா அவலங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
இம் மாவட்டத்தில் கொக்கட்டிச்சோலை, வெல்லாவெளி, கிரான், செங்கலடி ,வாகரை, வவுணதீவு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் வாழும் மக்கள் யானைகளின் அட்டகாசத்தால் பல இழப்புகளை தினமும் சந்தித்து வருகின்றனர்.
இந்தநிலையில், கொக்கட்டிச்சோலை - கச்சக்கொடி - சுவாமிமலை கிராமம் காட்டுயானை தாக்கத்தால் முற்றாக காணாமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இக் கிராமத்தில் இதுவரை சுமார் 30பேர் யானைகளின் தாக்குதலுக்கு பலியாகியுள்ளதாக, அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
பலர் யானைத் தொல்லையால் கிராமத்தை விட்டே வெளியேறிவிட்டனர்.
யானைகளின் தாக்கத்தால் கால்கள் மற்றும் அவயங்ளை இழந்த பலர் இக் கிராமத்தல் எவ்வித அடிப்படை வசதிகளுமின்றி வாழ்வதையும் காணமுடிகின்றது. காட்டு யானைகளால் காவுகொள்ளப்பட்ட மனித உயிர்களுக்கு மத்தியில் பல நூறு வீடுகள், பல்லாயிரம் ஏக்கர் காணிகள், நெல்வயல்கள், தென்னை மற்றும் மரக்கறிச் செய்கைகள் தினமும் நாசமாக்கப்பட்டே வருகின்றன.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களின் காட்டு யானைத் தாக்குதல்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதே மக்களின் குற்றச்சாட்டு.
கிராமத்தை வளைத்து மின்சார வேலிகள் அமைக்கப்பட்டுள்ள போதிலும், மின்வேலிகளின் கட்டைகளை பிடுங்கி எறிந்து விட்டு கிராமங்களுக்குள் யானைகள் நுழைவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்