முல்லைத்தீவு முள்ளியவளையை சேர்ந்த முன்னாள் போராளி சித்திரவேல் வசந்தரூபன் (கலைக்குமரன்) என்பவர் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்…
விடுதலைப்புலிகளின் ராதா வான்காப்பு சிறப்புப் படையணியில் இருந்து, முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் 2009ம் ஆண்டு 4ம்மாதம் முள்ளந்தண்டில் ஏற்பட்ட துப்பாக்கிசூட்டு காயத்தினால் இடுப்பிற்கு கீழே இயங்க முடியாத நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய தாயார் சித்திரவேல் பூமணி (71) மிகவும் வறுமைக்கோட்டிற்கு கீழ் தனது மகனை பராமரித்து வருகின்றார்.
ஏழு வருடங்களாக அடிப்படை வசதிகள் அற்ற நிலையின் காரணமாக படுத்த படுக்கையில் இருத்த கலைக்குமரனுக்கு வலது காலில் படுக்கைபுண் ஏற்பட்டது.இதனால் கிருமிகள் வலதுகால் எலும்பைத் தாக்கியுள்ளது. இதன் காரணத்தால் உயிர் ஆபத்து ஏற்படும் நிலையில் தற்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இவருடைய உயிர் ஆபத்தை தடுக்க வேண்டுமானால் வலதுகாலை முற்றும் முழுதாக அகற்ற வேண்டும் எனவும் மருத்துவ நடவடிக்கைகள் எடுப்பதற்கு உடலில் இரத்தம் போதுமானதாக இல்லையென்றும் அவருடைய மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சத்துள்ள உணவுகளை கொடுப்பதற்கு வசதிகள் இல்லையெனவும் மற்றும் கால் அகற்றும் மருத்துவ நடவடிக்கைக்கு பணவசதியற்ற நிலையில் இருப்பதாகவும், தாயார் பூமணி கவலையுடன் குறிப்பிட்டுள்ளார்.மீள்குடியேற்றத்தின் பின்னர் இன்றுவரை தமக்கு அரசாங்கம் எந்தவகையிலும் உதவி செய்யவில்லை.
மருத்துவ நடவடிக்கைகள் பணமின்றி செய்யமுடியாத சூழல் இருப்பதபதாகவும், மாதாந்தம் தனியார் மருந்துக்கடைகளில் மருந்து வாங்குவதற்கு 1800ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் தாயார் மேலும் குறிப்பிட்டார்.