பெண்களிடம் கைப்பைகள் பறிப்பு'டுவிட்டர்' புகாரில் கொள்ளையன் கைது



பெங்களூரு:தனியாக செல்லும் பெண்களின் கைப்பைகளை, மோட்டார்
சைக்கிள்களில் வந்து, பறித்த வழிப்பறி கொள்ளையனை, 'டுவிட்டர்' தகவல் மூலம் போலீசார், கைது செய்துள்ளனர்.


மொபைல் போன்:பெங்களூரு, மத்திய வர்த்தக பகுதியான செயின்ட் மார்க்ஸ் ரோடு, லாவேலி ரோடு, ரெசிடென்ஸி ரோடு, எம்.ஜி., ரோடு, காந்தி நகர் பகுதிகளில், தனியாக செல்லும் பெண்கள், மொபைல் போனில் பேசியபடி செல்லும் பெண்களிடம், மோட்டார் சைக்கிளில் சென்று, கண் இமைக்கும் நேரத்தில், கைப்பையை பறித்து செல்லும் சம்பவங்கள் நடந்து வந்தன.




ஒவ்வொரு முறையும், வெவ் வேறு பைக்குகளை பயன்படுத்தி, வழிப்பறி நடந்ததால், குற்றவாளியைக் கண்டுபிடிப்பது, போலீசாருக்கு சவாலாக இருந்தது.இந்நிலையில், கடந்த நவம்பர், 20ம் தேதி, போலீசுக்கு, 'டுவிட்டர்' மூலம் புகார் அனுப்பிய பெண், கொள்ளையன் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் எண்ணை குறிப்பிட்டிருந்தார். இதன் அடிப்படையில், அசோக் நகர், கப்பன் பார்க் போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், பொருத்தியிருந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம், போலீசார் கவனிக்கத் துவங்கினர்.




எட்டு பெண்கள்:போலீசார் வைத்த பொறியில் சுனில் குமார் என்பவன் சிக்கினான். இவன், சம்பங்கிராம் நகரை சேர்ந்தவன். இதுவரை, 24 பெண்களின் கைப்பையை அபகரித்தது தெரிந்தது. ஆனால், எட்டு பெண்கள் மட்டுமே புகார் கொடுத்துள்ளனர்.இவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், நான்கு மொபைல் போன்கள், 14 ஆயிரம் ரூபாய் ரொக்கம் அவற்றை போலீசார் கைப்பற்றி, மேலும் விசாரித்து வருகின்றனர்.