பறவை காய்ச்சல் அச்சம் நீங்கியதால், தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்திருந்த கோழிக்கறி விலை, மீண்டும் உயர்ந்து வருகிறது.

பறவை காய்ச்சல் அச்சம் நீங்கியதால், தமிழகத்தில் வீழ்ச்சி அடைந்திருந்த கோழிக்கறி விலை, மீண்டும் உயர்ந்து வருகிறது. விதவிதமான கோழி உணவுகளை ருசிக்கும் ஆர்வத்தில், கோழிக்கறி வாங்க, கடைகளில் மக்கள்
குவிந்து வருகின்றனர்.

கடந்த மாத இறுதியில், கேரள மாநிலம், ஆலப்புழா, கோட்டயம் உள்ளிட்ட மாவட்டங்களில், பறவை காய்ச்சல் (ஹெச்5 என்1 வைரஸ்) பாதிப்பு ஏற்பட்டது. 15 ஆயிரத்துக்கும் அதிகமான வாத்துகள் இறந்தன. பாதிப்பு காரணமாக, வளர்ப்புக்கு தகுதியற்றவை என, 1.50 லட்சம் வாத்து மற்றும் கோழிகள் அழிக்கப்பட்டன.

பரிசோதனை:தமிழகத்திற்கும், பறவை காய்ச்சல் பரவக் கூடும் என்பதால், மக்கள் அச்சம் அடைந்தனர். கேரளாவில் இருந்து வரும் வாகனங்கள், பல கட்ட பரிசோதனைக்கு பிறகே, மாநிலத்திற்குள் அனுமதிக்கப்பட்டன.இந்த சூழலில், தமிழகத்திலும் பறவை காய்ச்சல் பீதியால், சிக்கன் உணவுகளைவிதவிதமாக ருசித்த மக்கள், கோழி இறைச்சி வாங்க தயக்கம் காட்டினர்; கடைகளிலும் கூட்டம் குறைந்தது.விற்பனை குறைந்ததால், விலையிலும் திடீர் வீழ்ச்சி ஏற்பட்டது.

குறைந்தது:ஒரு கிலோ உயிர்கோழியின் பண்ணை விலை, 70 ரூபாய்க்கு மேல் இருந்து, தடாலடியாக 53 ரூபாய் வரை குறைந்தது. இன்னும் சில பண்ணையாளர்கள், இருக்கும் கோழிகளை விற்று தீர்த்தால் போதும் என,48 ரூபாய்க்கே விற்றனர். சில்லரையில், ஒரு கிலோ கோழி இறைச்சி, 150 ரூபாயில் இருந்து, 100 ரூபாய் என்ற அளவுக்கு குறைந்தது. விலை குறைந்த போதும், விற்பனை அதிகரிக்கவில்லை; 50 சதவீதம் வரை


விற்பனை குறைந்தது.இந்த சிக்கலான நிலையில், 'தமிழக பண்ணைகளில், எங்கும் பறவை காய்ச்சல் பாதிப்பு இல்லை. மக்கள் அச்சமின்றி, கோழிக்கறி சாப்பிடலாம்' என, சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீங்கியது அச்சம்:தற்போது, பறவை காய்ச்சல் குறித்த அச்சம், முற்றிலும் நீங்கி உள்ளதால், மீண்டும் கோழிக்கறி விற்பனை சூடுபிடித்து உள்ளது. கோழிக்கறி வாங்க, கடைகளில் காலை நேரத்தில், அதிககூட்டம் வந்து விடுகிறது.பண்ணை விலை மட்டுமின்றி, விற்பனை விலையும் உயர்ந்து வருகிறது. இது, சில்லரை வியாபாரிகள் மத்தியில், மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முட்டை விலை346 காசாக நிர்ணயம்:நாமக்கல்லில், தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நேற்று நடந்தது. முட்டை உற்பத்தி, மார்க்கெட் நிலவரம் குறித்து, பண்ணையாளர்கள் விவாதித்தனர். இதையடுத்து, முட்டை கொள்முதல் விலையில், 356 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை, 10 காசு குறைத்து, 346 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.நாமக்கல்லில், நேற்று நடந்த பண்ணையாளர்கள், வியாபாரிகள் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், முட்டைக்கோழி விலை, ஒரு கிலோ, 66 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டது. பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ, 68 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டது.



பறவை காய்ச்சல் அச்சத்தால், கோழி வர்த்தகத்தில், சற்று மந்த நிலை இருந்தது. தற்போது, அச்சம் நீங்கி நிலைமை சீரடைந்து உள்ளது. இதனால், கோழிக்கறி விலை, இயல்பு நிலைக்கு வந்துள்ளது.
நல்லதம்பி
நாமக்கல்
கோழிப்பண்ணையாளர் சங்கத் தலைவர்

பறவை காய்ச்சல் பீதியால், எப்போதும் இல்லாத அளவில், கோழிக்கறி கிலோ, 100 ரூபாய்க்கு விற்றோம். தற்போது, அச்சம் நீங்கியதால், மக்கள் அதிகம் வருகின்றனர். தோலுடன் கறி - 140 ரூபாய், தோல் நீக்கிய கறி - 160 ரூபாய்க்கு விற்கிறோம். மூன்று வாரத்திற்கு பின், விற்பனை சூடு பிடித்துள்ளது, மகிழ்ச்சியாக உள்ளது.
சலாவுதீன்
இறைச்சி வியாபாரி,