வெள்ளையின பொலிசார் சுட்டுக்கொலை: பழி தீர்த்த கருப்பினத்தவர் (வீடியோ இணைப்பு)

அமெரிக்காவில் கருப்பின வாலிபர்கள் கொல்லப்பட்டதற்கு பழிக்கு பழியாக இரு நியூயோர்க் பொலிசார் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கடந்த யூலை 17ம் திகதி, எரிக் கார்னர் (63) , ஆகஸ்ட் 9ம் திகதி, மைக்கேல் பிரௌன் (18) ஆகிய இரு கருப்பினத்தவர்கள், அமெரிக்கக் காவலர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.
காவல்துறையின் இத்தகைய செயல்களுக்கு எதிராக அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் எரிக் கார்னரை சுட்டுக் கொன்ற வெள்ளையின காவலருக்கு எந்தத் தண்டனையும் இல்லை என்று ஜூரிகள் தீர்ப்பு வழங்கியதால் போராட்டம் மேலும் தீவிரமடைந்து, ஆங்காங்கே சில வன்முறை சம்பவங்களும் நடைபெற்றன.
கடந்த 13 ஆம் திகதி எரிக் கார்னர் கொலை வழக்கில் நீதி கேட்டு அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் லட்சக்கணக்காணோர் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாது, குழந்தைகளை நடை வண்டிகளில் வைத்து தள்ளியபடி பேரணி நடத்தினர்.
இதுபோன்று அமைதியான போராட்டங்கள் ஒருபுறம் நடைபெற்றாலும் மற்றொருபுறம் கருப்பின மக்கள் மத்தியில் காவல் துறையினர் மீதான வெறுப்பும், வன்மமும் அதிகரித்த வண்ணம் இருந்தது.
இந்நிலையில் புரூக்ளினின், டாம்ப்கின்ஸ் குடியிருப்பு அருகே நேற்று மதியம் வென்ஜியன் லியு, ரஃபேல் ருமாஸ் என்ற இரண்டு வெள்ளையின காவலர்கள் தங்களது ரோந்து வாகனத்தில் வைத்து இஸ்மாயில் பிரின்ஸ்லி (28) என்ற கருப்பின வாலிபரால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கொலை செய்த உடன் அருகிலுள்ள சுரங்கப்பாதைக்குச் சென்று பிரின்ஸ்லி தன்னைத் தானே சுட்டுக் கொண்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.