
இதன்போதே நீதவான், குறித்த நிறுவனம் இயங்குவதற்கு தற்காலிக தடை விதித்து தீர்ப்பளித்ததுடன், மத்திய சுற்றாடல் அதிகார சபை, தேசிய நீர்வழங்கல் அதிகார சபை, உடுவில் பிரதேச செயலாளர், உடுவில் சுகாதார வைத்தியதிகாரி ஆகியோர், பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு தொடர்பில் உரிய தரப்பினர் அக்கறையுடன் செயற்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், மத்திய சுற்றாடல் அதிகார சபை வருடா வருடம் வழங்கும் அறிக்கையில் இது தொடர்பான பாதிப்புக்களை கருத்திற்கொள்ளாமல் அனுமதி வழங்கியமையும் நீதவான் இதன்போது சுட்டிக்காட்டினார். நொர்தன் பவர் நிறுவனத்தின் மின்பிறப்பாக்கிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட கழிவு எண்ணெய், பாதுகாப்பற்ற முறையில் நிலத்தில் கொட்டப்பட்டமையால், சுன்னாகம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளிலுள்ள 800க்கும் மேற்பட்ட கிணறுகளில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக்கூறி இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கில், நொர்தன் பவர் நிறுவனம், இலங்கை மின்சார சபையின் உத்துறு ஜனனி திட்டம் மற்றும் இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவான், '2014ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கின் விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வந்தவேளையில், நொர்தன் பவர் நிறுவனத்தினால் வாய்க்கால் வழியாக நிலத்தில் விட்டிருந்த கழிவு எண்ணெய், இந்த அனர்த்தத்துக்கு காரணமாக அமைந்தது என்று வழக்கு விசாரணை மற்றும் ஆய்வுகள் மூலம் புலனாவதாக' தெரிவித்தார்.
இந்நிலையில், 'மறுஅறிவித்தல் வரும் வரையில் நொர்தன் பவர் நிறுவனத்தின் மின் உற்பத்திச் செயற்பாடுகள் அனைத்தையும் இடைநிறுத்தி வைப்பதற்கு உத்தரவிடுவதாக' நீதவான் கூறினார். 'இந்த பிரச்சினை தொடர்பில் விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும். அரச திணைக்களங்களின் அதிகாரிகள் இது தொடர்பில் விரைந்து நடவடிக்கை எடுக்காமை கவலைக்குரிய விடயம். பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்டு அங்கே எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன எனக்குறிப்பிட்டு, பொதுமக்கள் சார்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை உடுவில், தெல்லிப்பளை மற்றும் கோப்பாய் பிரதேச செயலாளர்களினால் மன்றுக்கு அறிக்கையிடப்பட வேண்டும்' என்றும் நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுத்தமான குடிநீரை தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை வழங்க வேண்டும் என சபையின் பிராந்திய முகாமையாளருக்கு உத்தரவிட்ட நீதவான், மருத்துவ ரீதியான விழிப்புணர்வு நடவடிக்கைகளை சுகாதார வைத்திய அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளுமாறும் கட்டளை பிறப்பித்தார்.