கல்வி அமைச்சால் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு மாறாக, நிதி சேர்த்ததாக கூறப்படும் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி அதிபர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இவரால் முப்பத்தாறு இலட்சத்து இருபத்தையாயிரம் (3625,000) ரூபா நிதி சேர்க்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சின் செயலாளரது உத்தரவுப் படி மேற்கொள்ளப்பட்ட ஒழுக்காற்று விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் அந்த அமைச்சின் ஊடகப் பிரிவால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் வௌியாகியுள்ளது.
இவ்வருடம் முதலாம் வகுப்புக்கு மாணவர்களை இணைத்துக் கொள்ள வந்த பெற்றோரிடம், பாடசாலை நிர்மாணப் பணிகளுக்காக எனக் கூறி, சந்தேகநபர் பணம் பெற்றுள்ளதாக, அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இதன்படி 50,000 ரூபா வீதம் 65 பேரிடமும், ஒருவரிடம் 75,000 ரூபாவும், ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா (150000.00) வீதம் இருவரிடமும், குறித்த அதிபர் பணம் பெற்றுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கல்வி அமைச்சினால் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரிக்கு நான்கு மாடிக் கட்டடம் ஒன்றை அமைக்க 70 மில்லியன் ரூபாவை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேகநபரான அதிபர் இவ்வாறு நிதி சேகரித்துள்ளார் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.