ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு 8ம் திகதி நடைபெறாது : பரபரப்பு தகவல்

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு விசாரணை, வரும் 8ம் திகதி நடைபெறாது என உச்ச நீதிமன்ற பதிவுத்துறை அறிவித்துள்ளது.

 ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கை கர்நாடக நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதையடுத்து அந்த தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பின்னர், ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பும் எதிர் மனு தாக்கல் செய்துள்ளனர்.

 இந்த மேல்முறையீட்டு மனு, கடந்த ஆண்டு நவம்பர் 23ம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதிகள், இந்த வழக்கு தொடர்பாக கர்நாடக மாநில அரசு, திமுக பொதுச் செயலாளர் அன்பழகன் மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா உட்பட நால்வர் தரப்பிலும் இருந்து ஆயிரக்கணக்கான ஆவணங்கள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.

 வழக்கின் விசாரணை தொடங்குவதற்கு முன்பாக இரு தரப்பினரும் இறுதிவாதம் தொடர்பான தொகுப்பை தாக்கல் செய்ய வேண்டும். பின்னர் மேல் முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை தொடங்கும் என்று கூறி சனவரி 8ம் திகதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர். உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து, 

கர்நாடக அரசு, திமுக தரப்பு மற்றும் ஜெயலலிதா தரப்பு சார்பில் இறுதிவாத தொகுப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின், உச்ச நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை முதல் செயல்படத் தொடங்கியது.