வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரான் பிரதேசத்தில் இளவயதுத் திருமணம் நடைபெறுவதற்கு உடந்தையானார் என்ற குற்றச்சாட்டின் பேரில் தாயார் பொலிஸாரினால் விசாரிக்கப்பட்டு வருவதோடு கணவன் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. கிரான், பொன்டுகள்சேனை பகுதியில் வசிக்கும் தரம் 8ல் கல்வி பயிலும் 15வயது நிரம்பிய மாணவியை, அதேபகுதியைச் சேர்ந்த 17வயது இளைஞன் ஒருவருக்கு, சிறுமியின் தாயார் திருமணம் செய்து வைத்துள்ளார்.
இதனை அறிந்த அப்பிரதேச கிராம சேவக உத்தியோகத்தர், பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த தாயை பொலிஸார் கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றதோடு, குறித்த இளைஞனையும் கைது செய்துள்ளனர்.
தந்தை இல்லாத காரணத்தினாலும், தனது மகளை பராமரிக்க முடியாத வறுமை சூழலினாலும் இத்திருமணத்தை நடாத்தி வைத்துள்ளதாக, பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் அச்சிறுமியின் தாயார் தெரிவித்துள்ளார்.
பொலிஸாரினால் மீட்கப்பட்ட சிறுமி வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வைத்திய பரிசோதனை அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.