கனடா நாட்டில் புகலிடம் கோருவதற்காக பெற்றோருடன் படகில் பயணித்த சிரியா நாட்டு சிறுவன் அய்லான் குர்தி எப்படி கடலில் மூழ்கி உயிரிழந்தான் என்பதை விளக்கும் உருக்கமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
சிறுவன் அய்லான் குர்தியின் உயிரிழப்பால் பெரிதும் வேதனைக்குள்ளான பிரபல அவுஸ்திரேலிய பாடகரான மிஸ்ஸி ஹிங்கின்ஸ் என்பவர் இந்த இரங்கல் வீடியோவை தயாரித்து வெளியிட்டுள்ளார்.
’ஓ கனடா…’ என்ற பாடல் வரிகளுடன் தொடங்கும் இந்த வீடியோவில் சிரியாவின் கோர முகம் காட்டப்படுகிறது.
உள்நாட்டு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடுகின்றனர். இவர்களில் 3 வயதான அய்லான் குர்தியும் அவனது குடும்பத்தினரும் சிரியாவை விட்டு தப்பிக்க முயல்கின்றனர்.
சிரியாவை விட்டு வெளியேறும்போது, அவர்களை பிணங்களை தின்னும் கழுகுகள் வட்டமிட்டு துரத்துகின்றன.
இவைகளிடமிருந்து தப்பிய அய்லான் குடும்பத்தினரும், வேறு சிலரும் ஒரு படகில் ஏறி மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பாவிற்கு பயணமாகின்றனர்.
இரவு பகலாக பயணிக்கும் அந்த சிறிய படகு பல்வேறு இன்னல்களை எதிர்கொள்கிறது. கடும் சூறாவளி, பேய் மழை, உடலை சுட்டெரிக்கும் வெயில் என அனைத்தையும் தாங்கிக்கொண்டு கனடாவில் குடியேறுவோம் என்ற நம்பிக்கையில் அவர்களின் பயணம் தொடர்கிறது.
ஆனால், கடலில் மிக மோசமான சூறாவளி ஏற்பட அதில் படகு சிக்கி சிதறடிக்கப்படுகிறது. இந்த விபத்தில் அய்லான் குர்தி, அவனது தாயார் மற்றும் சகோதரன் உள்ளிட்ட அனைவரும் பலியாகின்றனர்.
உயிரிழந்த அய்லான் குர்தியின் உடல் துருக்கி கடற்கரையில் ஒதுங்கியது.
இதனை ஒரு பாதுகாவலர் ஆய்வு செய்வது போன்று வெளியான அந்த புகைப்படம் ஒட்டுமொத்த அகதிகளின் பிரச்சனைகளை பிரதிபலிப்பதாக இருந்தது.
இந்த வீடியோவின் இறுதியில், ‘ஓ கனடா தேசமே……உன்னை நாடி வரும் அகதிகளை உன் கரங்கள் கொண்டு அன்புடன் அரவணைத்துக்கொள்’ என்ற பாடல் வரிகளுடன் வீடியோ நிறைவுப் பெறுகிறது.
அய்லான் குர்திக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட இந்த வீடியோ தற்போது இணையத்தளங்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது.