பெண்கள் மொபைலில் பேசினால் தண்டனை: கிராம பஞ்சாயத்தின் நூதன முடிவு

உத்தர பிரதேசத்தில் உள்ள கிராமம் ஒன்று 18 வயதுக்கு குறைந்த பெண்கள் மொபைல் போன்களில் பேசுவதற்கு தடை விதித்துள்ளது. 

 உத்தர பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் உள்ள பசௌலி கிராமத்தின் பஞ்சாயத்து பெண்களுக்கு நூதன கட்டுப்பாடு விதித்துள்ளது. அதன்படி, 18 வயதிற்கு குறைவான பெண்கள், மொபைல் போன் மற்றும் சமூக வலைதளங்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டுள்ளது. பெண்கள், மொபைல் போன் பேசுவதை பார்த்தால், உடனடியாக அவர்களின் பெற்றோருக்கு தண்டனை விதிக்கப்படும். 

 அதாவது, மொபைல் போனில் பேசிய இளம் பெண்ணின் பெற்றோர்,எட்டு நாட்களுக்கு, கிராமச் சாலைகளை சுத்தம் செய்ய வேண்டும் அல்லது 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும். மொபைலில் பேசும் இளம் பெண்களை கண்டுபிடிக்க, கிராம பஞ்சாயத்து சார்பில் 3 குழுக்களும் அமைக்கப்பட்டு உள்ளது. பெண்களுக்கு கட்டுப்பாடு மட்டுமில்லாமல் சாராயம் விற்கவும், குடிக்கவும் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.