சினிமா மோகத்தால் சீரழிந்த வாழ்க்கை: நடிகை சசிரேகா கொலையில் திடுக்கிடும் புதிய தகவல்கள்!

போரூர் அருகே தலை துண்டித்து கொலை செய்யப்பட்ட நடிகை சசிரேகா கொலையில் பல திடுக்கிடும் புதிய தகவல்கள் அம்பலமானது. 

கைதான கணவர் மற்றும் கள்ளக்காதலியை போலீசார் சிறையில் அடைத்தனர். குப்பைத் தொட்டியில் பிணம் போரூர்-மவுண்ட் செல்லும் சாலையில் சின்ன போரூர், ராமாபுரம் அருகே சாலையோரத்தில் உள்ள குப்பைத் தொட்டிக்கு அருகில் கடந்த மாதம் 5-ந்தேதி போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் இளம்பெண் ஒருவர் பிணமாக கிடந்தார். தலை துண்டிக்கப்பட்டு நிர்வாண நிலையில் உடல் மட்டும் முண்டமாக கிடந்தது. ராயலா நகர் போலீசார், அந்த உடலை கைப்பற்றி கொலை செய்யப்பட்ட அந்த பெண் யார்?, என விசாரித்து வந்தனர். சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் குணசேகரன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் புஷ்பராஜ், சந்துரு, குணசேகரன் ஆகியோர்

 தலைமையில் தனிப்படைகள் அமைத்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். புகார் அளித்தவர் மாயம் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் காணாமல் போன இளம் பெண்கள், திருமணமாகி கணவரை பிரிந்தவர்கள், ஆதரவற்ற இல்லங்களில் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் மாயமானவர்கள் குறித்த தகவல்களை போலீசார் திரட்டினார்கள். பிணமாக கிடந்த பெண்ணின் கைரேகைகளை பெங்களூருக்கு எடுத்துச் சென்று, தமிழகத்தில் உள்ள ஆதார் அட்டைகளில் உள்ள பெண்களின் கைரேகைகள் ஏதாவது 

ஒன்றுடன் அவை ஒத்துப்போகிறதா? என்று சோதனை செய்தனர். ஆனால் அதில் தகவல்கள் வர காலதாமதம் ஏற்பட்டதால் சென்னையில் நிலுவையில் உள்ள புகார்கள் குறித்து விசாரிக்க தொடங்கினர். அப்போதுதான் மடிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் சினிமா துணை நடிகை சசிரேகா என்பவர் தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டு தன்னை வைத்து குறும்படம் எடுப்பதாக கூறி பல லட்சம் ரூபாய் பறித்து, தன்னை ஏமாற்றிய கணவர் ரமேஷ்சங்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் புகார் அளித்து இருந்தார் என்பது தெரியவந்தது.

 ஆனால் அதன்பிறகு அவரை காணவில்லை என்பதும் தெரியவந்தது. சினிமா துணை நடிகை பிணமாக கிடந்த பெண்ணின் உடல் அமைப்பு சினிமா நடிகை போல் இருப்பதாக போலீசார் சந்தேகித்தனர். இதனால் சசிரேகாவின் புகைப்படத்தையும், பிணமாக கிடந்த பெண்ணின் உடலையும் ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் ஒத்துப்போனது. இதையடுத்து அவரது கணவர் ரமேஷ்சங்கர் என்ற தமிழிடம் விசாரிக்க சென்றபோது அவர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. விசாரணையில் சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்சங்கர் தங்கி இருப்பது போலீசாருக்கு தெரியவந்தது. போலீசார் உடனடியாக சோழிங்கநல்லூர் சென்று ரமேஷ் சங்கரையும், அவருடன் தங்கை என்று கூறி தங்கி இருந்த லக்கியா என்ற பெண்ணையும் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

 அதில் கொலை செய்யப்பட்டது நடிகை சசிரேகாதான் என்பதும், அவரது தலையை கொளப்பாக்கத்தில் உள்ள கால்வாயில் வீசியதும் தெரிந்தது. சசிரேகா தலையை போலீசார் மீட்டனர். கைதான 2 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில் மேலும் பல திடுக்கிடும் புதிய தகவல்கள் அம்பலமானது. அதன் விவரம் வருமாறு:- சினிமாவில் சம்பாதிக்க ஆசை செங்கல்பட்டை சேர்ந்த ரமேஷ் சங்கருக்கு ஏற்கனவே திருமணமாகி விட்டது. அப்போது ஏற்பட்ட கடன் நெருக்கடியால் அவருடைய மனைவி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து சினிமா துறையில் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையில் அவர், விருகம்பாக்கத்தில் ஒரு சினிமா அலுவலகத்தை தொடங்கினார். 

 பெற்றோர்களை இழந்த லக்கியா, தனது பாட்டியின் பராமரிப்பில் கேரளாவில் வசித்து வந்தார். சிறு வயதிலேயே அவருக்கு திருமணம் செய்து வைக்க அவரது பாட்டி முடிவு செய்தார். இதனால் அவர் வீட்டை விட்டு வெளியேறி சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் கேரளாவில் இருந்து தப்பித்து சென்னை வந்தார். அப்போது அவருக்கு, ரமேஷ்சங்கரின் அறிமுகம் கிடைத்தது. சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என லக்கியாவிடம் ரமேஷ்சங்கர் வாக்குறுதி அளித்தார். 

 தங்கை என அறிமுகம் இதையடுத்து லக்கியாவை தனது தங்கை என்று கூறி வளசரவாக்கம் அடுத்த ஆலப்பாக்கத்தில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து இருவரும் ஒன்றாக தங்கி இருந்தனர். லக்கியாவை பல பேரிடம் காட்டி தான் இயக்கப்போகும் படத்துக்கு லக்கியாதான் கதாநாயகி என்று கூறி பலரிடம் பணம் வசூல் செய்து ஏமாற்றினார். ஆனால் வெளியுலகிற்கு தெரியாமல் ரமேஷ்சங்கர்-லக்கியா இருவரும் கணவன், மனைவி போல் வாழ்ந்து வந்தனர். அப்போது கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டவர்களை சினிமாவில் பயன்படுத்தும் துப்பாக்கி மற்றும் கத்தியை காட்டி மிரட்டி வந்தார். திருமணம் இதற்கிடையில் சினிமாவில் நடிக்க வேண்டும் என்ற ஆசையில் வந்த சசிரேகாவின் அறிமுகம் ரமேஷ்சங்கருக்கு கிடைத்தது. 

 சசிரேகாவுக்கும் ஏற்கனவே வேறு ஒருவருடன் திருமணமாகி 7 வயதில் ரோசன் என்ற மகன் உள்ளான். சசிரேகாவிடம் தான் இயக்கப்போகும் படத்தில் நீ தான் கதாநாயகி என்று கூறி பணம் வாங்கிக்கொண்டு ‘நாளை முதல் குடிக்க மாட்டேன்’ என்ற படத்தை ரமேஷ் சங்கர் இயக்கி உள்ளார். இதில் சசிரேகா கதாநாயகியாகவும், ரமேஷ்சங்கர் வில்லனாகவும் நடித்து உள்ளனர். லக்கியாவை தனது தங்கை என்று சசிரேகாவிடம் ரமேஷ்சங்கர் அறிமுகம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு சசிரேகாவும், ரமேஷ்சங்கரும் திருமணம் செய்து கொண்டனர். 

பின்னர்தான் ரமேஷ்சங்கருக்கும், லக்கியாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதும், மேலும் பல பெண்களுடன் ரமேஷ்சங்கருக்கு தொடர்பு இருப்பதும் சசிரேகாவுக்கு தெரியவந்தது. அதில் ஏற்பட்ட தகராறில் கடந்த செப்டம்பர் மாதம் தன்னை வைத்து குறும்படம் இயக்குவதாக கூறி பணத்தை வாங்கியும், தனது மகனை கடத்தி வைத்துக்கொண்டும் தன்னுடன் வாழ மறுத்து வருவதாகவும் கூறி மடிப்பாக்கம் போலீசில் ரமேஷ்சங்கர் மீது சசிரேகா புகார் ஒன்றை அளித்து பரபரப்பை ஏற்படுத்தினார். மீண்டும் கர்ப்பம் அதன்பிறகு அவர்களுக்குள் சமரசம் ஏற்பட்டதையடுத்து போரூர் அடுத்த மதனந்தபுரத்தில் உள்ள வீட்டில் ரமேஷ்சங்கர், சசிரேகா, அவரது மகன் ரோசன் மற்றும் லக்கியா ஆகிய 4 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர். 

 ஆனாலும் ரமேஷ்சங்கர், லக்கியாவுடன் உள்ள தொடர்பை கைவிட மறுத்து வந்தார். இதனால் சசிரேகாவுக்கும், ரமேஷ்சங்கருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் சசிரேகா மீண்டும் கர்ப்பமானார். கடந்த மாதம் 4-ந்தேதி இது குறித்து ரமேஷ்சங்கரிடம், சசிரேகா கூறினார். ஆனால் அவர், “உனது கர்ப்பத்துக்கு நான் காரணம் இல்லை” என்று கூறி சசிரேகாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ரமேஷ்சங்கர் ஆத்திரத்தில் சசிரேகாவை சரமாரியாக தாக்கினார். 

இதில் நிலை குலைந்து கீழே விழுந்த சசிரேகா தலையில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த தகராறின் போது லக்கியா கீழ் அறையில் ரோசனுடன் இருந்தார். சத்தம் கேட்டு மாடிக்கு சென்று பார்த்தபோதுதான் சசிரேகா கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. சோழிங்கநல்லூரில் வசிப்பு இதையடுத்து சசிரேகாவின் உடலை என்ன செய்வதென்று அவர்கள் திட்டம் போட்டனர். போலீசிடம் சிக்காமல் இருக்கவும், சசிரேகா கற்பழித்து கொலை செய்யப்பட்டது போல் போலீசாரை நம்ப வைக்கவும் முடிவு செய்து சசிரேகா அணிந்து இருந்த உடைகளை கிழித்தனர். பின்னர் கத்தியால் அவரது தலையை துண்டித்து அதை ஒரு கவரில் போட்டுக்கொண்டனர்.

 உடலை ஒரு போர்வையில் சுற்றி காரில் எடுத்துக்கொண்டு தலையை கொளப்பாக்கத்தில் உள்ள கால்வாயில் வீசிவிட்டு, உடலை குப்பை தொட்டி அருகே கிடத்தி விட்டு தப்பிச்சென்று விட்டனர். தங்கள் மீது சந்தேகம் வராமல் இருக்க சசிரேகா படப்பிடிப்பு விஷயமாக வெளியே சென்று என்றும், வருவதற்கு சில நாட்கள் ஆகும் என்றும் கூறி ரோசனை சசிரேகாவின் பெற்றோரிடம் விட்டுச்சென்று விட்டனர்.

 அதன்பிறகு மதனந்தபுரத்தில் உள்ள வீட்டை காலி செய்து விட்டு சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ரமேஷ்சங்கர்-லக்கியா இருவரும் வசித்து வந்தனர். மேற்கண்ட விவரங்கள் போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தன. சிறையில் அடைப்பு இதையடுத்து நேற்று முன்தினம் ரமேஷ்சங்கர், லக்கியா இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதான இருவரையும் நேற்று காலை பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 1-ல் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். கைதான லக்கியா தற்போது ‘கருப்பசாமிபுரம்’ என்ற படத்தில் நடித்துக்கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது. பெண் கொலையில் துப்பு துலங்குமா? 

என்ற சந்தேகம் எழுந்த நிலையில் இறந்து போன பெண்ணின் உடல் அமைப்பு நடிகையை போல் இருப்பதாக கருதிய போலீசார், நிலுவையில் உள்ள வழக்குகளை வைத்து விசாரணை நடத்தி சாமர்த்தியமாக கொலை செய்யப்பட்ட பெண் யார்? எனவும், கொலையாளிகள் யார்? எனவும் துப்பு துலக்கியதை போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டினர். சினிமாவால் சீரழிந்த வாழ்க்கை கொலை செய்யப்பட்ட சசிரேகா, கைதான ரமேஷ்சங்கர், 

லக்கியா ஆகிய 3 பேருக்கும் சினிமா மோகத்தால் அறிமுகம் ஏற்பட்டு உள்ளது. அதன்பிறகு அவர்களின் வாழ்க்கை திருமணம், கள்ளக்காதல் என்று தடம்புரண்டு சசிரேகாவின் உயிரை பழிவாங்கி விட்டது. ரமேஷ்சங்கர், லக்கியா இருவரும் சிறைக்கு சென்று விட்டனர். ஆனால் ஒன்றும் அறியாத 7 வயது சிறுவன் ரோசன், தற்போது தனது தாயை இழந்து தவிக்கிறான்.