கடந்த கால ஆட்சியாளர்களை போல் அல்லாமல் இந்த நல்லாட்சியில் மக்களுக்கான சேவை அரசாங்க அதிகாரிகளினால் திறம்பட தங்குதடையின்றி கிடைக்க வேண்டும்.
இந்த பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து வாழ்கின்ற இப்பிரதேசத்தில் சேவைகள் பாகுபாடின்றி மக்களை சென்றடைய வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச செயலகப் பிரிவின் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் (05) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இதன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது எதிர்காலத்தில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டதுடன், முன்னுரிமை அடிப்படையில் வேலைத்திட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டது.
அத்துடன் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்களின் நிலைமைகள் தொடர்பாக ஆரயப்பட்டு அவற்றையும் நிவர்த்தி செய்வதற்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்வில், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், ரி.கலையரசன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ரி.கிருபைராஜா உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள், அரச உயர் அதிகாரிகள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என மேலும் பலர் கலந்து கொண்டனர்.
அவர் இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், கடந்த காலங்களில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் மற்றும் சேவைகள் முறையான திட்டத்தின் அடிப்படையில் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் பாதிப்படைந்துள்ளனர். எதிர்காலத்தில் நடைபெறுகின்ற அபிவிருத்திகள் திறமையானதாக இருக்க வேண்டும். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளை சரியான முறையில் செயற்படுத்த அனைவரும் பாடுபட வேண்டும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அண்மையில் இடம்பெற்ற கூட்டத்தின் போது, அபிவிருத்தி குழு கூட்டங்களை நடத்தி அவற்றின் செயற்பாடுகளை துரிதமாக சமர்ப்பிக்குமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இனிவரும் காலங்களில் அனைத்து அதிகாரிகளும் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும்.
அவ்வாறு கலந்து கொள்ளாத அதிகாரிகளை பிரதேச செயலாளர் எனக்கு அறிவித்தால் அது தொடர்பில் என்னால் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்