
இதேவேளை, நாட்டுக்குள் ஏற்படுத்தப்படுகின்ற புதிய மாற்றங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் புதிய அரசாங்கத்தின் குறைபாடுகளை எடுத்துச்; சொல்லவும் பொது பல சேனா ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றும் அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
இனவாதத்துக்கும் தேசிய வாதத்துக்கும் உள்ள வித்தியாசத்தை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் இந்த வித்தியாசம் தெரியாமல் கத்தி கூச்சலிடுபவர்களுக்கு அது தொடர்பான விளக்கத்தை அளிக்க பொது பல சேனா தயாராக உள்ளது என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இதேவேளை, பொது பல சேனாவின் நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகேவினால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிக்கையில், 'எவ்வளவு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டாலும், எவ்வளவு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டாலும் பொதுபல சேனா சொல்ல வேண்டிய கசப்பான உண்மையை சொல்ல அஞ்சாது' என குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், 'பொதுபல சேனா, போதைப்பொருள் மற்றும் ஊழல் மோசடிகள் குறித்து பேசியது தேர்தல்களை இலக்கு வைத்து அல்ல என்றும் 2013ஆம் ஆண்டு போதைப்பொருள் நகரமான கொலன்னாவையில் நாம் மாநாடு ஒன்றை நடத்தியிருந்தோம்' என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
'போதைப்பொருளினால் ஏற்படக்கூடிய அழிவுகள் குறித்து பாடசாலை மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலருக்கும் தெளிவுபடுத்தல்கள் மேற்கொள்ளப்பட உள்ளது. பௌத்த விஹாரைகளை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. ஜனாதிபதி தேர்தலில் உறுதியளிக்கப்பட்டது போன்று போதைப்பொருள் கடத்தல்கள் விநியோகத்தை கட்டுப்படுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் அவர் மேலும் தனது அறிக்கை மூலம் கோரியுள்ளார்.