காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்கும் மெஹபூபா முப்தி

காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக மெஹபூபா முப்தி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் மாநில முதல்வர் முப்தி முகமது சையது (79) உடல் நலக்குறைவு காரணமாக மறைந்துவிட்டார்.

 இதையடுத்து அவரது மகள் மெஹபூபா முப்தி காஷ்மீரின் முதல் பெண் முதல்வராக பதவியேற்க உள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் மூத்த தலைவர் முஸாபர் ஹுசைன் பெய்க் தெரிவித்துள்ளார். ஆனால் மெஹபூபா முப்தி முதல்வராவது குறித்த முடிவுக்கு மாநிலத்தில் ஆட்சி கூட்டணியில் இருக்கும் பாஜக ஒப்புதல் வழங்க வேண்டியுள்ளது. 

 கடந்த 2014ம் ஆண்டு நடந்த 87 உறுப்பினர்கள் கொண்ட ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தலில், மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களில் வெற்றி பெற்றது. மேலும், பாஜக 25, தேசிய மாநாட்டு கட்சி 15, காங்கிரஸ் 12 இடங்களைப் பெற்றன. பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எந்த கட்சியும் ஆட்சியமைக்க முன்வராத நிலையில், அங்கு ஆளுநர் ஆட்சி அமல் செய்யப்பட்டது. 

 பின்னர் சுமார் இரண்டு மாதங்கள் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பயனாக மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கூட்டணி அமைக்க முடிவு செய்து இரு கட்சிகளுக்கும் ஆட்சியை பங்குபோட்டுக் கொண்டுள்ளன. தற்போது காஷ்மீரின் துணை முதல்வராக பாஜகவின் நிர்மல் குமார் சிங் பதவி வகிக்கிறார். எனவே இரண்டு கட்சிகளும் இணைந்து அடுத்த முதல்வர் குறித்து விரைவில் அறிவிப்பை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.